கேகாலை, அரநாயக்காவில் ஏற்பட்டது ‘கில்லர் நிலச்சரிவு’ வகையைச் சார்ந்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக புவியில் மற்றும் புவிச்சரிதவியல் பேராசிரியர் கபில தகநாயக்கா தெரிவித்தார்.
இதேவேளை, இது சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் தன்மை கொண்டது என்றும் இது பாறைகள் சிதைவடைந்து மண் உருவாகும் இயற்கை செயற்பாட்டின் ஒரு கட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் கபில தகநாயக்கா அவ்விடத்தை நேரடியாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரநாயக்கா விபத்து நடந்துள்ள இடத்தில் இதன் பிறகு சிறிய அளவிலான மண்படைகள் கழன்று விழுவதைத் தவிர வேறு அனர்த்தம் அண்மித்த காலங்களில் ஏற்படும் வாய்ப்பு விஞ்ஞான ரீதியாக இல்லை எனலாம்.
அரநாயக்க சிரிபுர பிரதேசம் நூறு வருடங்களுக்கு மேல் மண்சரிவு ஒன்றைச் சந்தித்த இடமாக இருக்கும். அது பற்றி அறியாத மக்களே அங்கு போய் குடியிருப்புக்களை அமைத்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வருடங்களாக ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றங்கள் காரணமாக பாரிய கற்பாறைகளுக்கிடையே தண்ணீர் சென்று உட்பகுதியிலுள்ள பாறைகள் சிதைவடைகின்றன.
பாறைகளின் சிதைவிலிருந்தே மண் உருவாகிறது. இதுதான் மண் உருவாகும் வரலாறாகும். அவ்வாறான மண் படைகளுக்குள் மேலுள்ள நீர் சென்று மீண்டும் மீண்டும் செல்வதால் அதன் கனஅளவு அதிகரித்து அவ்விடம் வெடிப்படையும். அதுவே இவ்வடத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவாகும்.
அப்படியான ஏற்படும் வெடிப்பு பாரிய சத்தத்தை ஏற்படுத்துவதோடு கீழ் பகுதியில் உள்ள காய்ந்த களிமண் படலத்தில் தூசித்துகள் ஏற்பட்டு புகை போன்று வெளிக்கிளம்பும். அவை வழிந்தோடும் நீருடன் சேர்ந்து கீழ்நோக்கி சகதியாக வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே இது கில்லர் லேண்ட சிலைட் (Killer Landslide) அல்லது கில்லர் நிலச்சரிவு எனப்படும். இதற்கு முன்னர் இப்படியான பாரிய நிகழ்வொன்று இலங்கையில் பதிலாகவில்லை எனவும் கூறினார்.
முன்னர் சிங்கராஜ பிரதேசத்தில் ஆரம்பித்த நிலச்சரிவு மற்றும் சமனலவெவ நிலச்சரிவு, மாத்தளை நிக்கலோயா சரிவு போன்றவை இதனை யொத்த சிறிய சரிவுகளாகக் கொள்ளலாம்.
இந்தியாவில் ஹிமாலயா பிரதேசத்தில் இவ்வாறான நிலச்சரிவுகளை பரவலாக அவதானிக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார். அவ்வாறான இடங்களில் 5 அல்லது10 கிலோ மீற்றர் தூரம் வரை ஆறுகள்போன்று பாய்வதுடன் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றசம்பவங்களும் உண்டு என்றார்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பல்வேறு வகையான கற்பாறைக் கலவைகள் இருப்பதாகவும் இந்த வகை மண் நல்ல செழிப்பான அல்லது வளமான மண்ணாகக் கருதப்படுவதாகவும் கூறினார்.
அதாவது மிகப்புதிய மண்ணாக அல்லது தாவரங்கள் இதுவரை வளராத மண்ணாகக் கொள்ளமுடியும் என்றார்.
இவ்விடத்திலுள்ள மண் வளமானதாக இருப்பதால் காலப்போக்கில் மக்கள் அங்கு குடியேறுவதுடன் சுமார் 100 ற்கும் மேற்பட்ட வருடங்களின் பின் இதே இடத்தில் அதே பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் நிலை உண்டு என்றும் அவ்வமயம் பழைய நிலைமைகளை மக்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.