நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் தொடரில் உசைன் போல்ட் மூன்றாவது தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 4X100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.
ஏற்கனவே ஆண்களுக்காக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார்.
அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நின்றது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை இவர் தட்டிச் சென்றார்.