முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி என்ற பெயரில் முகநூலில் (பேஸ்புக்) தவறான தகவல்களைப் பரப்பிய பிரான்ஸ் நாட்டவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை தேறி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி கடந்த 3 நாட்களாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நேற்று மாலையும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது.
இந்த தவறான தகவல்களை கேட்டு முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி பொதுமக்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள்.
நேற்று அ.தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழச்சி என்பவர் தனது முகநூலில் முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். தீயநோக்கத்துடன் முதல்-அமைச்சர் உடல்நிலைப் பற்றி அவர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் நேற்று 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
முதல்-அமைச்சர் பற்றி தவறான தகவல்களை முகநூலில் (பேஸ்புக்) பதிவு செய்து பிறருக்கு அனுப்புவது கடுமையான குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.