நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி இருக்கிறது.
தனிநபரின் அசையா சொத்து, ரொக்க கையிருப்பு, பங்குகள் மற்றும் தொழில்கள் வாயிலான வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் பணக்கார நகரங்களின் பட்டியல் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் 10 லட்சம் டாலர் மற்றும் அதற்கு அதிக சொத்து உடையவர்கள் கோடீஸ்வரர்கள் என்றும், 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேலான சொத்து கொண்டவர்கள் மெகா கோடீஸ்வரர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில், 45,000 கோடீஸ்வரர்கள் மற்றும் 28 மெகா கோடீஸ்வரர்களுடன் மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து 82,000 கோடி டாலராகும். டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 22 ஆயிரம் கோடீஸ்வரர்களும், 18 மெகா கோடீஸ்வரர்களும் உள்ளனர். இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 45,000 கோடி டாலராக உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூருவில் 7,500 கோடீஸ்வரர்களும், 8 மெகா கோடீஸ்வரர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து 32,000 கோடி டாலராகும்.
ஐதராபாத் (8,200 கோடீஸ்வரர்கள் மற்றும் 7 மெகா கோடீஸ்வரர்கள்), கொல்கத்தா (8,600 கோடீஸ்வரர்கள் மற்றும் 10 மெகா கோடீஸ்வரர்கள்), பூனா (3,900 கோடீஸ்வரர்கள் மற்றும் 5 மெகா கோடீஸ்வரர்கள்), சென்னை (6,200 கோடீஸ்வரர்கள் மற்றும் 4 மெகா கோடீஸ்வரர்கள்), கூர்கான் (3,600 கோடீஸ்வரர்கள் மற்றும் 2 மெகா கோடீஸ்வரர்கள்) ஆகிய நகரங்களிலும் கணிசமான சொத்து மதிப்புடன் பெரும் பணக்காரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சூரத், அகமதாபாத், விசாகப்பட்டினம், கோவா, சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் வதோதரா ஆகியவை புதிய பணக்கார நகரங்களாக உருவெடுத்து வருகின்றன. இவ்வாறு நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.