ஹிஜ்ரி என்றால் என்ன?
அது எதனை குறிக்கின்றது. ஹஜர என்ற அரபுப் பதத்திலிருந்து பிறந்தது தான் ஹிஜ்ரி, ஹிஜ்ரத் என்ற சொற்கள். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு குடிபெயர்ந்து செல்லுதல் என்பதே ஹிஜ்ரத் என்ற சொல்லின் பொருளாகும்.
இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் ஹர்ரான் என்ற ஊரிலிருந்து பாலஸ்தீனம் சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது.
தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச்
செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.
இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.
ஈட்டிய சொத்துக்கள், ஓட்டிய வாகனங்கள், செழுமைமிக்க வாழ்க்கை அனைத்தையுமே அந்த அல்லாஹ்வுக்காக தியாகத்தோடு துறக்க முன்வந்தார்கள். சுமார் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பயணத்தை தொடர்ந்தும், அதற்கு முன்னருமாக அணியணியாக நபித் தோழர்களும் தாம் பிறந்து வாழ்ந்த மக்கமா நகரைத் துறந்து 500கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யத்ரிப்(இன்றைய மதீனா) எனும் பெரு நகரை அடைந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது 53, அண்ணலாரின் வருகையையடுத்து அன்று வரை ‘யத்ரிப்’ என அழைக்கப்பட்ட அந்நகரம் ‘நபிகளாரின் நகரம்’(மதீநதுன் நபி - நபியின் நகரம்) என அழைக்கப்படலாயிற்று. இந்நிகழ்வையே ஹிஜ்ரத் பயணம் என்கிறோம். இவ்வாறான ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர்களே ‘முஹாஜிரீன்’கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப்படுகிறது.
எனவே இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறிய ஆண்டாகிய கி.பி. 622ம் வருடம் ஹிஜ்ரியின் முதல் ஆண்டாகவும் அவ்வாறே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் மாதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.
அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள்
பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம் 7, பக்கம் 268)
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: புகாரி (3934)
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
(பத்ஹுல் பாரீ: பாகம் 7, பக்கம் 268)
நபிகளார் அவர்கள்; மதினா சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது. இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.
எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்' என்று குறிப்பிட்டார்கள்.
(பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268)
இந்த கருத்து தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது