Sunday, July 28, 2013

தனித்துப் போட்டியிடும் மு.காவின் தீர்மானம் தவறு; சமூகத்தின் நன்மைக்காகவே ஸ்ரீல.சு.க வில் இணைந்தேன் முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் யஹியா

வடமேல் மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்று மேற்கொண்ட தீர்மானத்தையடுத்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் இணைந்துகொண்டதாகவும் சமகால சூழ்நிலையில் ஜனாதி பதியின் கரங்களைப் பலப்படுத்த தேவை அனைவருக்கும் இருப்பதாகவும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.யஹியா தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அங்கம் வகித்து அரசியல் உயர்பீட உறுப்பினராக இருக்கும் தனது அனுபவத்தின் அடிப்படையில் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் பறிபோனமைக்கு இந்தக் கட்சியின் புத்தளம் மாவட்ட வருகையே பிரதான காரணமென அவர் குறிப்பிட்டார்.

சில இனவாத சக்திகளின் தீய பார்வைக்குள்ளாகியுள்ள முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை விடுத்து மேலும் மேலும் இனத்துவேஷத்தை வளர்க்கும் முயற்சி தவிர்க்கப்பட வேண்டும். மு.கா தனித்துப் போட்டியிடுவதால் பேரினவாதிகள் முஸ்லிம் சமூகத்தை மேலும் கறுப்புக்கண்ணாடியுடன் நோக்கும் சூழலே ஏற்பட வாய்ப்புள்ளது.

புத்தளம் மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். பாராளுமன்றில் தொடர்ந்து பிரதிநிதித்துவத்தைப் பெற்று வந்த நாம் மு.காவின் வருகையின் பின்னர் பிரிந்து நின்று செயற்பட்டதால் பிரதிநிதித்துவத்தை இழந்தோம். எங்களை நாங்கள் ஆண்டு வந்த நாம் இன்று மாற்றாரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மட்டுமன்றி இன்று மாகாணசபைப் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம். எனவே தான் இந்த அரசியல் வியாபாரத்தை வெறுத்தொதுக்கி சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படத் தீர்மானித்தேன். புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ¤டன் இணைந்து நானும் இந்த அரசைப் பலப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
Disqus Comments