Thursday, August 1, 2013

இந்தியாவில் பெட்ரோல் டீஸல் விலை உயர்த்தப்பட்டது!

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகிவிட்ட பெட்ரோல் மற்றும் டீஸல்  மீண்டும் விலை உயர்த்தப்பட்டு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

 பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகளும், டீஸல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில்  ஐந்தாவது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பெட்ரோலுக்கான இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது என்று எண்ணை நிறுவனங்கள் கூறியுள்ளன. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.

சென்னையில் விலை உயர்வுக்குப் பின் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.49 ஆகவும், ஒரு லிட்டர் டீஸல் விலை ரூ.54.76ஆகவும் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் புதுடெல்லியில் உள்ளூர் வரிகள் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84 பைசா அதிகரித்து ரூ.71.28 ஆகவும்  ஒரு லிட்டர் டீசல் விலை 56 பைசா அதிகரித்து ரூ.51.40ஆகவும் உயர்ந்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உள்ளூர் வரிகள் சேர்த்து 88 பைசா அதிகரித்து, ரூ.78.61ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை உள்ளூர் வரிகள் சேர்த்து 62 பைசா அதிகரித்து, ரூ.58.23ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. மாதம்தோறும் டீசல் விலையைச் சிறிது சிறிதாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(INRM)
Disqus Comments