Tuesday, September 10, 2013

இலங்கையில் சர்வாதிகாரம் தலைதூக்கும் : நவநீதம்பிள்ளை எச்சரிக்கை

ஜெனீவா: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது கூட்டம் இன்று ஆரம்பமானது. இக்கூட்டத்தில் இலங்கையின் செயல்பாடுகளுக்கு பலவேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இப்பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, "இலங்கையில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து சொல்ல என்னை சந்தித்தவர்கள் இலங்கை அரசால் அச்சுறுத்தப்படுவதாக" சொன்னார். 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய அமெரிக்க பிரதிநிதி, "இலங்கை மனித உரிமை விவகாரங்களை எதிர் கொள்ள ஐ.நாவின் தொழில் நுட்ப உதவிகளை பயன்படுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். நவநீதம் பிள்ளையை சந்தித்த சமூக ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்தால் அச்சுறுத்தப்பட்டதற்கு கவலையையும், வியப்பையும் வெளியிட்ட ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகள், இக்குற்றசாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

 மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த நவநீதம்பிள்ளை, "எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு பார்த்தால், இலங்கையில் சர்வாதிகாரம் தலைதூக்கும் அபாயம் உள்ளது. இலங்கை அரசு தன்னை சந்தித்தவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும்" என்று இலங்கை அரசை எச்சரித்தார்.
Disqus Comments