Wednesday, October 16, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தில், முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் சகல மக்களினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேக மில்லை’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :-

உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன். முஸ்லிம் மக்கள் தமது நாளாந்த ஐவேளைத் தொழுகையின் போது முன்நோக்குகின்ற திசையான புனித மக்கா நகரில் நான்கு மில்லியன்களுக்கும் அதிகமானவர்கள் ஒன்றுசேரும் புனித ஹஜ் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்களின் மிகவும் முக்கியமான வருடாந்த நிகழ்வாகும். 

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு வருடாந்த ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்வதற்கான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் முலம், அவர்கள் புனித அல்குர்ஆனினதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கான தமது அர்ப்பணங்களை புதுப்பித்து, உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் புரிந்துணர்வு நிலவ வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர். புனித அல்குர்ஆனின் போதனைகளுக்கேற்ப இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். 

எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிக்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இந்த விசேட தினத்தில், முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் எல்லா மக்களினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழச்சியும் அமைதியும் நிறைந்த ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்.
Disqus Comments