Wednesday, October 30, 2013

பல்கலைக்கழக மாணவர்களை எருமை மாடுகள், கழுதைகள் என்கிறார் உயர்கல்வி அமைச்சர்

வரலாற்றில் முதல் முறையாகவே பிரித்தானிய பட்டத்தை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க போவதாக கூறும் அளவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முட்டாள்களாக இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இளவரசர் சார்ள்ஸ் மீரிகமவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிஸ மாணவர் சங்கம் நேற்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜர் ஒன்றை கையளித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் எதனையும் அறியாத மாடுகளாக உள்ளனர். இவர்கள் முட்டாள்கள் அல்ல மாடுகள் அதுவும் எருமை மாடுகள்.

காரணம் இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டங்களை வழங்கும் 26 நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 11 நிறுவனங்கள் பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் பட்டங்களை வழங்குகின்றன.

நாங்கள் மேலும் 10 பல்கலைக்கழங்களுடன் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். வரலாற்றில் முதல் முறையாக என்று கூறும் அளவிற்கு இந்த மாணவர்கள் எந்தளவு மாடுகளாகவும், கழுதைகளாகவும் இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

முட்டாள் பிள்ளைகளுடன் நாங்கள் பேசி பலனில்லை. இன்னும் மகஜர்களை வழங்க முடியும். உண்ணாவிரதம் இருக்க முடியும். அவர்கள் எதனை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எங்கள் பணி அது செவ்வனே நடக்கும் என்றார்.
Disqus Comments