Tuesday, November 5, 2013

பொது மன்னிப்புக் காலம் முடிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாதோரை அழைத்துவர நடவடிக்கை

பொது மன்னிப்புக் காலம் முடி வடைந்த பின்னரும் சவூதி அரேபியா விலிருந்து நாடு திரும்ப முடியாமலி ருப்பவர்களை அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கமைய திருப்பியழைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலம் கடந்த 03 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 90 சதவீதமானவர்கள் பாதுகாப்பான முறையில் நாடு திரும்பியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
 
 
இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய இதுபற்றி கூறுகையில்; சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 16 ஆயிரம் இலங்கையர்களுள் 15 ஆயிரம் பேர் பொது மன்னிப்புக் காலத்திற்குள் இலங்கைத் தூதரகம் மற்றும் கெளன்சியூலர் அலுவலகங்களில் சரணடைந்துள்ளனர்.
இவர்களுள் 12 ஆயிரம் பேர் சவூதி அரேபிய பொலிஸாரின் (தவசாத்) அனுமதியுடன் இலங்கை வந்தடைந்துள்ளனர். குறுகிய எண்ணிக்கையான ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான இலங்கையர்களே பொது மன்னிப்புக் காலத்திற்குள் நாடு திரும்ப முயற்சிக்காமல் இருந்துள்ளார்கள். இவர்கள் சட்டவிரோதமாக சவூதி அரேபியா வந்தமைக்காக அந்நாட்டு அரசாங்கத்தினால் 30 இலட்சம் ரூபா தண்டப்பணம் அல்லது 02 வருட சிறைத் தண்டனை அல்லது அவை இரண்டும் வழங்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இவர்களை இத்தகைய பாரிய தண்டனைக்கு உட்படுத்தாது அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கமைய குறுகிய தண்டனைகளுக்கூடாக நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இவர்கள் எதற்காக மற்றும் எப்படி சவூதிக்குள் வந்தார்கள் என்பது தொடர்பில் ஆராயும் வகையில் குறுகிய காலத்திற்கேனும் சவூதி பொலிஸாரினால் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது தவிர்க்க முடியாதது. எவ்வாறாயினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று பாரிய தண்டனைகளிலிருந்து இவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை தூதரகத்திற்கூடாக அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Disqus Comments