Tuesday, November 5, 2013

40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து கணவரைக் காப்பாற்றிய மனைவி

போலியோவால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்துவிட்ட தம் கணவரை 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து காப்பாற்றிய பெண், முதியோர் பென்சன் கேட்டு அரசு கதவைத் தட்டியுள்ளார்.

ஈரோடு எல்லபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி பழனியம்மாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென ஆறுமுகத்தை போலியோ தாக்கியது. இதனால் கை, கால்கள் செயலிழந்த ஆறுமுகத்தால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.

தம்மைக் காப்பாற்றி வந்த கணவர் செயலிழந்ததும் செய்வதறியாது திகைத்த பழனியம்மாள், பல இடங்களில் வேலைகளுக்கு முயற்சி செய்தும் சமூகத்தின் தீய கண்ணோட்டத்தால் சரியானபடி வேலை அமையவில்லை. எனினும் மனம் தளராத பழனியம்மாள், தம் கணவரை நாற்காலியில் அமரவைத்து அதனைக் கட்டியிழுத்து பிச்சையெடுக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து தம் கணவரைக் காப்பாற்றினார். இதற்கிடையில், அனாதைகளான இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டார். தாம் வளர்த்தக் கடனுக்குப் பிரதிபலனாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் அவர் பெறவில்லை.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி பழனியம்மாளின் கணவர் ஆறுமுகம் இறந்துவிட்டார். தமக்கான ஆதரவும் தம்மை விட்டு போன நிலையில், 40 ஆண்டுகளாக கயிறு கட்டி நாற்காலி இழுத்ததால் கைகளில் புண்களுடன் தள்ளாத நிலைக்கு வந்துவிட்ட இம்மூதாட்டி, மாவட்ட குறை கேட்பு நாளில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் தமக்கு முதியோர் ஓய்வூதியம் தரவேண்டுமென கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

பழனியம்மாள் என்பதைவிட அன்பு என்றே அழைப்பதற்கு எல்லாவித தகுதியும் உடைய இக்கருணை உள்ளத்திற்கு, வாழ்நாளின் இனியுள்ள எஞ்சிய காலங்களிலாவது நிம்மதியுடன் கழிப்பதற்கான ஆதரவை அரசு செய்ய வேண்டுமென்பது இவரின் கதையினைக் கேட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disqus Comments