Thursday, November 28, 2013

கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும், அதனை தடுத்து நிறுத்தி பல்கலைகழகத்தில் கடமையாற்றும் தகமையற்ற கல்விசார் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மாணவர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று (28) நண்பகல் 12.00மணி தொடக்கம் ஒரு மணி வரை நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எங்கள் எதிர்காலம் பீடாதிபதிகளின் கைகளில், பீடைகளை ஒழிப்போம் பீடத்தினைக் காப்போம், தொல்லை கொடுப்பவனே தொலைந்துபோ, போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவர்கள்,

இது அரசாங்கத்துக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தேவைக்கு அதிகமாக சில தகமையற்ற கல்விசார் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பல பிரச்சினைகளை பல்கலைக்கழகத்துக்குள் ஏற்படுத்த முனைகின்றனர்.

குறிப்பாக சிறப்பாக செயற்பட்டுவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியையும் இங்கு சிறந்த முறையில் கடமையாற்றும் விரிவுரையாளர்களையும் இங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி நியனம் தொடர்பிலான தேர்வில் பிழையுள்ளதாகவும் மீள் தேர்வு செய்யுமாறும் சிலர் வைத்திய கல்வி ஆய்வுத் திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர்.

இது சிறந்த முறையில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் நடவடிக்கைகளை தம்பிக்க செய்யும் நடவடிக்கையாகும்.கடந்த காலத்தினை விட சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. இதனை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜாவின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம். இது தொடர்பில் சிறந்த நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

எனவே சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை இடமாற்றும் செயலை உடனடியாக தடுத்து நிறுத்தி பீடத்தில் உள்ள தகுதியற்ற கல்விசார் ஊழியர்களை நீக்கவேண்டும்.அவ்வாறு நடைபெறாவிட்டால் தொடர்ச்சியான பகிஸ்கரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதுடன் உண்ணாவிரத போராட்டங்களையும் மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.
Disqus Comments