எகிப்தின் சட்டவிரோத இராணுவ அரசாங்கத்தினால் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி
முகம்மது முர்சிக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்ட 21 யுவதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 11 வருட சிறைத் தண்டனை
விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 7 பேர் 18 வயதுக்கும்
குறைவானவர்களாவர்.
தீவிரவாத குழுவுக்கு ஆதவாக செயற்பட்டமை, அலெக்சாந்திரியாவில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தின்போது வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியமை, நாச
வேலைகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இத் தண்டனைக்கு எதிராக உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கிளர்ந்தெழுந்துள்ளதுடன் இது ஒரு மடத்தனமான நடவடிக்கை எனவும் வர்ணித்துள்ளன.
7am இயக்கம் எனும் பெயரில் குறித்த யுவதிகள் ஒன்றிணைந்து முர்சிக்கு
ஆதரவாக காலை வேளையில் நடத்திய சாத்வீக போராட்டம் அது எனவும் அவர்கள்
எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவர்களது
உறவினர்கள் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 15 வயதான மாணவி ஒருவரின் தந்தை கருத்து வெளிளிடுகையில்,
தனது மகள் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் கைது
செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.