Saturday, November 30, 2013

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை?

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியுள்ளது.

இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது.

இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

சிங்களவர்கள் எதிர்ப்பு

இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான 'இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்' என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது.

அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.



Disqus Comments