பாரிஸ் : உலக வர்த்தக கண்காட்சி 2020 துபாயில் நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கெடுப்பு நேற்று பிரான்ஸ்
தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்றது. வாக்கெடுப்பின் ஆரம்ப கட்டத்திலே
துருக்கி மற்றும் பிரேசில் வெளியேறியது. இறுதி கட்ட போட்டி ரஷ்யாவின்
யோகரின்பர்க் மற்றும் ஐக்கிய அமீரக்த்தின் துபாய் ஆகியவற்றிற்கு
நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்று துபாய் உலக வர்த்தக கண்காட்சியை
நடத்தும் வாய்ப்பை பெற்றது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும்
துபாயிலுள்ள உலகின் மிகப் பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபாவில் வாணவேடிக்கை
நடத்தப்பட்டது. உலக வர்த்தக கண்காட்சியை நடத்தி உலகையே அசத்த விரும்புவதாக
துபாயை ஆட்சி செய்யும் சேக் முகம்மது பின் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
உலக கண்காட்சி 2020 துபாயில் நடைபெற
இருப்பதால், புதிய கண்காட்சி மையம், விடுதிகள் மற்றும் மெட்ரோ இரயில்
வசதிகளில் விரிவாக்கம் போன்றவை துபாயில் செய்யப்பட இருக்கிறது. இத்தகைய
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 8.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும்
என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், இக்கண்காட்சி மூலம் 23 பில்லியன்
டாலர் அளவில் துபாய்-க்கு வருமானம் கிடைக்கும் என்று தெரிகிறது.
உலக வர்த்தக கண்காட்சியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற பெருமையை ஐக்கிய அமீரகம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.