Monday, November 11, 2013

மஞ்சள் கோட்டில் பயணித்தவர் விபத்துக்குள்ளாகி மரணம்

பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் மஞ்சள் கோட்டில் பாதையை மாறிய ஒருவர் வாகனமொன்றில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பாணந்துறையிலிருந்து பண்டாரகம நோக்கி பயணித்த வேன் ஒன்றுடன் மோதுண்ட நிலையில் 54 வயதான ஆண் பலியானதுடன், 14 வயதான பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த மாணவி சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கல்கிசை தலைமையக காவல்துறை பரிசோதகரின் புதல்வர் என்றும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட காவல்துறை பரிசோதகரின் புதல்வர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கம்பளை, அம்புலுவாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து  விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினையால் விபத்து நேர்ந்த போதும், சாரதியின் சாமர்த்தியம் காரணமாக உயிர்ச்சேதங்கள்  தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலி, கிங்தோட்டை பிரதேசத்தில் கிங் கங்கையில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர்.

கிங் கங்கையில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் காணாமல் போனநிலையில், ஓருவரின் சடலம் நேற்று மாலை  வேளையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவர்கள் 14 மற்றும் 15 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Disqus Comments