இலங்கை கிரிக்கெட் அணி ஐந்தாவது தடவையாக ஆசியக்கிண்ண சம்பியன் ஆகியுள்ளது.
பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி சம்பியன்
ஆகியது. கூடுதலான ஆசியக் கிண்ணத்தை வென்ற நாடாக இந்தியா உடன் இலங்கை
இணைந்துள்ளது. இரு நாடுகளும் ஐந்து தடவைகள் வெற்றி பெற்றுள்ளன. இதேவேளை
இலங்கை அணி 9 தொடர்ச்சியாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் முதலில்
துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 260
ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் பவாட் அலாம் ஆட்டமிழக்காமல் 114
ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இது அவரின் முதற்சதம் என்பது
குறிப்பிடத்தக்கது. மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களையும், உமர் அக்மல் 59
ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் 5 விக்கெட்களையும் லசித் மாலிங்க
கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 261
ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் லஹிறு திரிமான்னே 101 ஓட்டங்களைப்
பெற்றுக் கொண்டார். மஹேல ஜெயவர்தன 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இருவரும் இணைந்து 156 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக்
கொண்டனர். குஷால் பெரேரா 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில்
சைட் அஜ்மல் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடர் நாயகனாக லஹிறு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டார்.