Friday, May 16, 2014

தேர்தல் தோல்வியை திமுக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது: கருணாநிதி

மக்களவை தேர்தல் தோல்வியை திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது என அக்கட்சியின்  தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவை தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதி திரவிட முன்னேற்ற கழகமானது 39 தொகுதிகளில்; 37 இடங்களை வென்றுள்ளது.

தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாராதிய ஜனாதாக கட்சி  மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை அதிமுக வகிக்கின்றது.
இந்நிலையிலேயே தலைவர் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.

மக்களின் இந்த முடிவை, 'மக்கள் குரலே மகேசன் குரல்' என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது. தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. 'வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை' என்று பேரறிஞர் அண்ணா அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments