Thursday, July 24, 2014

மற்றுமொரு விமானம் விபத்து - 116 பேர் பலி?- அல்ஜீரியாவில் சம்பவம்


அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. 

ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர். 

இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதை அடுத்து அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இந்நிலையில், மாயமான விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 116 பேரும் இறந்துவிட்டதாக அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் போர் நடைபெற்று வரும் உக்ரைனில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 298 பேரும் இறந்தனர். இதேபோல் அதே நிறுவனத்தின் மற்றொரு விமானம் கடந்த மார்ச் மாதம் நடுவானில் மாயமானது. அது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நேற்றையதினம் தாய்வானில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
Disqus Comments