இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கண்டி பல்லேகலயில் நேற்று பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக டில்சான் 86 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக மக்லரன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 38.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்க அணி சார்பாக ஹசீம் அம்லா தனது 14 சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 101 ஓட்டங்களை எடுத்தார். இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க நான்கு விக்கெட்டுகளையும் டில்சான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக திலகரட்ன டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1:1 என்ற ரீதியில் சமநிலையில் உள்ளன.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும்12 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது
