இலங்கையில், இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.
குறிப்பாக 22 முதல் 30 வயதிலான இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும், நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இது மேற்கொள்ளப்படவில்லை.
கிராமங்களில் குறைவு
கிராமங்களைவிட நகரப் பகுதியிலேயே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.
மக்களிடையே நீரிழிவு நோய், அதன் ஆபத்து, வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டியத் தேவை ஆகியவை குறித்து அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என்று, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் சுந்தரேசன் தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் உணவுக் கட்டுப்பாடு இல்லை, ஆரோக்கியமான உணவை அவர்கள் உண்பதில்லை எனவும் அவர் கூறுகிறார்.