நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்தால் இந்த
நாட்டில் உள்ள அனைத்துவித பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும்.
முழு நாட்டு மக்களுமே எதிர்க்கின்ற ஒரு ஆட்சிமுறையாகவே நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுகின்றது. இதனை இல்லாது செய்து
ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன்
பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று மாதுலுவாவே சோபித தேரர்
தெரிவித்தார்.
நேற்று கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நாக விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது இந்த
நாட்டினை பொறுத்த வரையில் ஜனாதிபதி முறைமை என்பது தேவையற்ற
ஒன்றாகும். நாட்டில் நிலவுகின்ற அனைத்துவித பிரச்சினைகளுக்கும்
இவ் ஜனாதிபதி முறையே காரணமாகும். எனவேஇ இதனை இல்லாதொழித்து அதிகார
பகிர்வினை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு நாட்டில் அதிகாரம் என்பது சட்டம் நீதி நிர்வாகம் என்று மூன்று
துறைகளுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்போதுதான் ஜனநாயகம் நிலவும். ஆனால் எமது நாட்டை பொறுத்தவரையில்
நிறைவேற்று துறையான ஜனாதிபதியிடம் மட்டுமே அதிகாரம் குவிந்து
மையப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய துறைகள் அதிகாரம் அற்று வெறுமையாக
உள்ளன. இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைநடத்த
நேர அவகாசம் கேட்டிருந்தோம். அது நமக்கு கிடைக்கவில்லை. ஆனால்இ
அரசாங்கம் தடுத்தாலும் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
நடத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
நாட்டில் பொலிஸ்துறை உட்பட அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
மரக்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினால்
மக்கள் பட்டினிச் சாவினை எதிர்நோக்கியுள்ளனர். விவசாயிகள் தற்கொலை
செய்து கொள்ளுகின்ற நிலை தொடர்கிறது. இது அனைத்துக்கும் காரணம்
அரசாங்கமே ஆகும்.
மகிந்த சிந்தனையென்று கூறி விமான நிலையங்களை அமைப்பதனால் மக்களின் வயிற்று பசியை போக்க முடியாது என்பதனை
அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம்
வகிக்கின்ற அமைச்சர்களுக்கும் கூட இது தெரியும். அமைச்சர்களான
வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன போன்றோரும் இதனால் தான்
நிறைவேற்று அதிகார முறைமை என்பதில் விருப்பம் இல்லை என்கின்றனர்.
ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பலரும் இதனைப் பற்றி
வாய்திறக்க அஞ்சுகிறார்கள்.
நாம் சகல எதிர்க்கட்சிகளுடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை
நடத்துவோம். விகிதாசார தேர்தல் முறைமை இல்லாமல் செய்யப்பட வேண்டும்.
17ஆம் திருத்தம் மீண்டும் அமுலாக்கப்படல் வேண்டும். எமது ஆதரவான பொது
வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெறும் போது இவை
நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக சுயாதீனமாக அனைத்து
துறைகளும் இயங்கும் வகையில் அதிகார பரவலாக்கத்தை ஏற்படுத்துவோம்.
இது நடந்தால் ஏனைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எளிதில் கிட்டி
விடும். ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் இந்த
நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது செய்து விட்டு சுயாதீனமான தேர்தல்
நடத்தப்படல் வேண்டும். அப்போது தான் இந்த நாட்டு மக்களுக்கு விமோசனம்
கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.