Monday, July 28, 2014

இலங்கை யுடனான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபி­ரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபி­ரிக்க அணி 1-0 என கைப்பற்றியது.
தென்ஆப்பிரிக்கா–இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்றது இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 421 ஓட்டங்களையும்;,தென்னாபி­ரிக்க 282 ஓட்டங்களையும் எடுத்தன. 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3ஆவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்களை எடுத்திருந்தது.
 
இந்த நிலையில் 4ஆவது நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை (27) தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 2ஆவது இன்னிங்சில் 53.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது. 
 
குமார் சங்கக்கார (72 ஓட்டங்கள்), மெத்யூஸ் (63 ஓட்டங்கள்) அரைசதம் விளாசினர். முதலாவது இன்னிங்சில் சதம் கண்ட மஹேல ஜயவர்த்தன எவ்வித ஓட்டங்களும் பெறாது அரங்கு திரும்பினார். முன்னதாக உணவு இடைவேளையின் போது மழையால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.
 
தென்னாபி­ரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மோர்னே மோர்கலின் ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 201–ஆக (58 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 6ஆவது தென்னாபி­ரிக்க பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் மோர்கல் பெற்றார்.
 
இதன் மூலம் இலங்கை அணி தென்னாபி­ரிக்காவுக்கு 369 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. குறைந்தது 127 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியுடன் இலக்கை துரத்திய தென்னாபி­ரிக்க அணி 17 ஓவர்களில் அல்விரோ பீட்டர்சனின் (0) விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததாலும், மழை குறுக்கிட்டதாலும் 4ஆவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது டீன் எல்கர் (13 ஓட்டங்கள்), குயின்டான் டீ கொக் (21 ஓட்டங்கள்) களத்தில் இருந்தனர்.
 
5ஆவது மற்றும் இறுதி நாளான இன்றைய ஆட்டம் 15 நிமிடத்திற்கு முன்பாக காலை 9.45 மணிக்கு ஆரம்பமானது. தென்னாபி­ரிக்க அணி வெற்றி பெற மேற்கொண்டு 331 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது.  ஆனால் இலங்கையின் சுழலை சமாளித்து இறுதி நாளில் மிகப்பெரிய ஓட்ட இலக்கை அடைவதே கடினமாகவே காணப்பட்டது.  எனினும் போராட்டத்துக்கு மத்தியில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை தென்னாபி­ரிக்க அணி பெற்றிருந்த போது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. டி கொக் 37, அம்லா 25 ஓட்டங்களை அதிகமாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
 
போட்டி சமநிலையை மனதில் கொண்டே  தென்னாபி­ரிக்க வீரர்கள் விளையாடியமையால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதற்கு மழையும் இடை இடையே குறுக்கிட்டு தென்னாபி­ரிக்க அணிக்கு உதவியதோடு இலங்கையின் வெற்றிக்கு முட்டுகட்டையாக இருந்தது.
 
இலங்கை அணியின் பந்து வீச்சில் சுழலில் சிறப்பாக செயற்பட்ட ரங்கண ஹேரத் 5 விக்கெட்டுகளையும் டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக ஸ்டெயின் தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் தென்னாபி­ரிக்க அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments