புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பிரதேசத்தில் இரகசியமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (04) சுற்றிவளைத்து அங்கிருந்த ஒருவரைக் கைது செய்ததுடன் அங்கிருந்த உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு வீட்டின் பின்புறம் கோழிப் பண்ணை ஒன்றினுள் இரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பங்கர் ஒன்றினுள்ளேயே இக் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையின் போது இந்நிலையத்தினை நடாத்தி வந்த ஒருவரைக் கைது செய்ததுடன் அங்கிருந்து 7440 கௌ;கலன், செப்புக்கம்பிச் சுருள்கள், 200 கொள்கலனில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த சட்டவிரோத கசிப்பு மற்றும் இரண்டு வெற்று பரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த சில காலமாக இங்கு கசிப்பு உற்பத்தி செய்து அண்மித்த பகுதிகளில் விற்பனை செய்து வந்திருப்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட உபகரணங்களுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.