Monday, July 7, 2014

சட்டத் தரணிகளை அச்சுறுத்துவதை தவிா்க்குமாறு ஞானசார தேரருக்கு நீதவான் அறிவுரை


சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்க்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரா தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் அறிவுரை வழங்கியுள்ளார்.


தனது கட்சிக்காரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் உரிமை சட்டத்தரணிக்கு உண்டு. அவர்கள் நீதிமன்ற அதிகாரிகளாகவே கருதப்படுகிறார்கள். அவ்வாறானவர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே அறிவுறுத்தியுள்ளார்.



கொழும்பு-2, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவை சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ஜீலை 7 ஆம் திகதி திங்கட்கிழமை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு ஜீன் 9 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.



அதனடிப்படையில் முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.



ஞானசார தேரரின் கூற்றில், அல்-குரானை அவமதித்தாரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்வதற்காக அந்த இறுவட்டு இஸ்லாம் சமயம் தொடர்பான பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.



இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
Disqus Comments