Saturday, January 3, 2015

AIR ASIA பயணிகள், ஜாவா கடல் பகுதியில் 22 உடல்கள் மீட்பு!


ஜகார்த்தா, ஏர் ஆசியா விமானம் உடைந்து விழுந்த ஜாவா கடல் பகுதியில் இருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.


162 பயணிகள்
ஏர் ஆசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த ‘ஏ320-200’ விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 162 பேருடன் சென்ற இந்த விமானம் நடுவானில் மாயமானது.

இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் கரிமட்டா ஜலசந்திக்கு அருகில் விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


பிரதான உடல் பகுதி
இதைத்தொடர்ந்து நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்புக் குழுவினர் ஜாவா கடல் பகுதியில் முகாமிட்டு மீட்பு பணிகளை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக விமானத்தின் சில பாகங்களும், சில பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டன.


இந்த விமானத்தின் பிரதான உடல் பகுதி மற்றும் கருப்பு பெட்டி உள்ளிட்டவற்றை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. மேலும் எஞ்சியுள்ள பயணிகளின் உடல்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


அதிநவீன கருவிகள்
அங்கு கப்பல்கள் சேகரித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, விமானத்தின் பிரதான பகுதியை நெருங்கி விட்டதாக கருதுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். முன்னதாக சோனார் முறை மூலம் கடலுக்கடியில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள், விமானத்தின் பிரதான பகுதியா? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.


விமானத்தின் கருப்பு பெட்டியை விரைவில் கண்டுபிடிக்கும் நோக்கில், ஒலி அலைகளை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் சர்வதேசக் குழுவினர் அப்பகுதியில் தேடும் பணியை நேற்று மேலும் தீவிரப்படுத்தினர். அந்த பகுதியில் இருந்து நேற்று மாலை வரை 22 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.


ராட்சத அலைகள்
இந்த தேடும்பணி குறித்து இந்தோனேஷிய தேசிய மீட்புக் குழுத்தலைவர் ஹென்றி பாம்பாங் கூறியதாவது:-


மீட்புப் பணியில் 2 முக்கியமான கட்டங்கள் உள்ளன. முதலில் விமானத்தின் பிரதான பகுதியை கண்டறிவது. 2-வது விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பது ஆகும்.


ஜாவா கடலில் விமானம் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடலில் 4 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்புகின்றன. இது கவலையளிக்கிறது.


5 கி.மீ. சுற்றளவு
விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடல்களும் கடலில் 5 கி.மீ. சுற்றளவில் பரந்து கிடக்கின்றன. எனவே தற்போது 1575 நாட்டிக்கல் சதுர மைல் தொலைவில் தேடும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான பயணிகள் விமானத்தின் இருக்கையிலேயே பிணமாகி இருக்கக்கூடும் என நாங்கள் கருதுகிறோம். எனவே நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் கடலின் அடிப்பரப்பு வரை சென்று தேடி வருகின்றனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


ஏர் ஆசியா விமானத்தின் உடைந்த பகுதிகள் மற்றும் பயணிகளின் உடல்களை தேடும் பணியில் 90 கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments