ஹைத்ராபாத், அவுரங்காபாத், அவுரங்காபாத் அருகே பெற்ற மகளையே கற்பழித்த தந்தை போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடூர தந்தை
அவுரங்கபாத் சஞ்சய்நகர்–பைஜீபூரா பகுதியைச் சேர்ந்தவர் மிர்சா சலீம் (வயது 45). இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த பெண்ணுக்கு 10 வயதாகிறது. இந்நிலையில், மிர்சா சலீம் அந்த 10 வயது பெண்ணை தக்சஷீலா நகர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார். இதை நோட்டமிட்ட சிலர், மிர்சா சலீமை கண்காணிக்க தொடங்கினர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், மிர்சா சலீம் தான் பெற்ற பிள்ளையையே கொடூரமாக கற்பழித்தார். இதனால், பதறிப்போன அவர்கள் உடனடியாக அந்த பெண்ணின் தாயாரிடம், அதாவது மிர்சா சலீமின் இரண்டாவது மனைவியிடம் முறையிட்டனர்.
தற்கொலை
இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். மனைவி போலீசில் புகார் செய்ததை அறிந்த மிர்சா சலீம் அங்கிருந்து தலைமறைவானார். எப்படியும் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று கருதிய அவர், தற்கொலை செய்து கொண்டு உயிர்விடுவதென தீர்மானித்தார். அதன்படி, சம்பவத்தன்று மாலை கிராந்தி சவுக் பகுதியில் அவர் விஷம் குடித்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற மகளையே தந்தை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.