ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த ஜனாதிபதித் தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 17 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் இத்தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என்பதை இப்போது பார்ப்போம். வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிவடையும்.வாக்களிக்கச் செல்லும் ஒருவர் தன்னை அடையாளப்படுத் தும் வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற வழமையான ஆவணங்களை எடுத்துச் செல்லலாம். வாக்காளர் அட்டையை தங்களுக்கு உரித்தான தேர்தல் சாவடியில் கடமையிலுள்ள அதிகாரியிடம் ஒப்படைத்தால் அந்த அதிகாரி உங்களுக்கானவாக்குச்சீட்டை வழங்குவார்.
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமக்கு அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பித்து தமக்கான வாக்கு அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இருக் கும் பட்சத்தில் தமக்கான வாக்குச் சாவடிக்குச் சென்று ஆளடையாளத்தை நிரூபித்து வாக்குச்சீட்டை பெற்றுக் கொள்ளவும் முடியும். இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் தமக்குரிய தபாலகத்துக்குச் சென்று தமக்குரிய வாக்காளர் அட்டையைப் பெறமுடியும்.
அந்த வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள அகர வரிசைப்படி அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளரின் பெயர்களுக்கு முன்னாள் அவர் சார்ந்த கட்சியின் சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். சுயேச்சை வேட்பாளரென்றால் தேர்தல் ஆணையாளரால் அந்த சுயேச்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சின்னம் அவரது பெயருக்கு முன்னால் அச்சிடப்பட்டிருக்கும். வேட்பாளரது பெயர் மற்றும் அவரது சின்னத்திற்கு எதிரில் ஒரு வெற்றுக் கூடு காணப்படும் அந்த கூட்டில் உங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்பினால் அவரது சின்னத்துக்கு முன்னாலுள்ள வெற்றுக்கூட்டில் X என்று புள்ளடியிடலாம்..
வாக்குச் சீட்டொன்றில் வாக்காளரொருவர் தனது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புக்களை அடையாளமிட்டிருக்காவிடினும் அந்த வாக்கு செல்லுப்படியாகும் வாக்குச் சீட்டாக ஏற்றுக்கொள்ளப்படும்.
வாக்குச் சீட்டொன்றில் வாக்காளரொருவர் தங்களது விருப்பத்திற்கேற்ப மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் நீங்கள் முதலாவதாக தெரிவு செய்யும் வேட்பாளரது பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்னாலுள்ள வெற்றுக்கூட்டில் ‘1’ என அடையாளமிட்டும், இரண்டாவதாக தெரிவு செய்யும் வேட்பாளரது பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்னாலுள்ள வெற்றுக்கூட்டில் ‘2’ என அடையாளமிட்டும் மூன்றாவதாக தெரிவு செய்யும் வேட்பாளரது பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்னாலுள்ள வெற்றுக்கூட்டில் ‘3’ என அடையாளமிட்டும் வாக்களிக்க முடியும்.. இவ்வாறு முறையாக அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் செல்லுப்படியானவையாக கருதப்படும்.
கீழ் கண்டவாறான வாக்குகள் செல்லுப்படியற்றதாக கருதப்படும்.
1. வாக்குச்சீட்டில் எந்தவொரு வாக்காளருக்கும் வாக்களிக்கப்பட்டிருக்காவிட்டால்
2. ஒரு வேட்பாளரை விட அதிக எண்ணிக்கையான வேட்பாளர்களுக்கு X என புள்ளடியிடப்பட்டிருந்தால்.
3. ஒரு வேட்பாளருக்கு ‘1’ என்றும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என புள்ளடியிடப்பட்டிருந்தால்
4. முதலாம் விருப்பு, இரண்டாம் விருப்பு மற்றும் மூன்றாம் விருப்பை விட அதிகமான விருப்புகள் அடையாளமிடப்பட்டிருந்தால்
5. இரண்டாம் விருப்பு மற்றும் மூன்றாம் விருப்பு மாத்திரம் அடையாளமிடப்பட்டிருந்தால்
6. வாக்குச்சீட்டில் வாக்காளரை இணங்கண்டுக் கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அல்லது வரையப்பட்டிருந்தால்
7. வாக்கு அடையாளமிடப்பட்டிருப்பது எந்த வேட்பாளருக்கு என்பது குறித்து சந்தேகத்துக்குறியதாகவிருந்தால்
இந்த வாக்குகள் செல்லுபடியற்றதென கருதப்பட்டு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
நன்றி :http://madawalanews.com/