Saturday, May 23, 2015

மஹிந்தவைப் போன்று இனவாதத்தைக் கக்காதீர் - ஊடகவியலாளருக்கு அமைச்சர் சூடான பதில்

'வடக்கில் உள்ளவர்கள் பிரபாகரனுடைய மரணத்திற்கு தீபம் ஏற்றுகின்றனர், சிங்கள நாட்டில் சிங்களவர்கள் நீதிமன்றதுக்கு கல்லெறிந்தது கிடையாது, பொலிஸ் நிலையத்தின் மீதோ அல்லது சிறைச்சாலைகளின் மீதோ தாக்குதல் மேற்கொண்டது இல்லை. ஆனால் வடக்கில் மாத்திரம் ஏன் அவ்வாறு நடக்கின்றது. நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என கூறும் நீங்கள் கூறும் பதில் என்ன? " என ஊடகவியலாளர் ஒருவர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பினார்.

உடனே ஆவேசமடைந்த நீதியமைச்சர் குறித்த ஊடகவியலாளரை நோக்கி " உங்களுடைய கேள்வியிலேயே இனவாதம் காணப்படுகின்றது. பொறுப்பற்ற வகையில் இவ்வாறான இனவாதமான கேள்விகளை எழுப்ப வேண்டாம். இது சிங்களவருடைய நாடு என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை நாடு ஆகும். பௌத்தர், தமிழர், முஸ்லிம், பேகர் என பல இனத்தவர்கள் சமத்துவத்துடன் வாழ்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று இனவாதத்தை ஏற்படுத்தும் சொற்களை பாவிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.

மேலும் யாழில் இடம்பெற்ற சம்பவத்தின் போது பொதுமக்கள் யாரும் நீதிமன்றத்துக்கோ அல்லது பொலிஸார் மீதோ கல் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. சடலத்தை மீட்ட பின்னரே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மேலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 130 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அப்பால் எவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
Disqus Comments