Monday, May 25, 2015

உலகைக் கவர்ந்த ‘உடனுக்குடன் போட்டோ கேமரா’ (Instant Camera)



உலக  அதிசயமாக   வர்ணிக்கப்பட்ட  1972-ம் ஆண்டு  தயாரான  ஷிஙீ  70  கேமரா


‘கையில காசு... வாயில தோசை’ என்று கிராமப்புறங்களில் ஒரு கூற்று உண்டு. அந்த கூற்றை கேமராவில் சாத்தியப்படுத்தி உலகத்தையே பிரமிப்பில் ஆழ்த்தியது, 'போலராய்டு லான்ட் கேமராக்கள்'. இதன் மூலம்தான் கேமரா படம்பிடித்த ஒருசில நிமிடங்களில் நாம் போட்டோவை கையில் எடுத்து பார்க்கிறோம். அடையாள அட்டை, பாஸ்போர்ட், பல் மருத்துவம், குற்ற போட்டோக்களை உடனுக்குடன் நாம் பார்க்க இந்த கேமராக்களே காரணமாக இருந்தன. கோடிகள் புரளும் விளம்பரம், பேஷன் துறைகளில் அரங்க வடிவமைப்புகளை படம்பிடித்து உடனுக்குடன் பார்த்து அலங்காரம், ஒளி அமைப்புகளை மேம்படுத்த இந்த போட்டோக்கள் பயன்பட்டன. உலகப் புகழ்பெற்ற மாடலிங் பெண்களை அலங்காரம் செய்து கொண்டிருக்கும்போதே படம் பிடித்துப் பார்த்து தேவையான மாற்றங்களை இதன் மூலம்தான் செய்தனர். அதனால் ‘போலராய்டு கேமரா' உலகில் மைல்கல்களில் ஒன்று.

இதனை உருவாக்கியவர் எட்வின் எச்.லான்ட் (Edwin H.Land). கேமரா ஆராய்ச்சியாளரான இவர், ‘போல ரைஸ்சிங் பில்ட்டர்ஸ்’ என்ற தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். 1940-ம் ஆண்டுகளில் அந்த தொழில்நுட்பத்தை அவர் மேம்படுத்திக் கொண்டிருந்தபோது, தனது இளைய மகள் ஜெனீபரை கேமராவால் படம் பிடித்தார். படம் எடுத்து முடித்ததும் ‘பிரிண்ட்போட்டு படத்தை பின்பு காட்டுகிறேன்’ என்றார். ஆனால் அந்த சிறுமியோ 'தான் உடனே அந்த போட்டோவை பார்த்தே ஆக வேண்டும்' என்று அடம் பிடித்தாள். அவள் அடம்பிடித்ததுதான் 'போலராய்டு கேமரா' கண்டு  பிடிக்கப்படுவதற்கு அடிகோலியது. 

தனது மகளைப்போன்று, கோடிக்கணக்கான குழந்தைகள் படம் பிடிக்கப்படும் தனது உருவத்தை உடனே போட்டோவாக காண விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்த எட்வின், அதற்கான ஆராய்ச்சியில் மூழ்கினார். ‘போலராய்டு லான்ட் கேமரா’ என்பதனை உருவாக்கி 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் செயல்விளக்கம் அளித்தார். 3¼ x 4¼ அங்குல பிரிண்ட், போட்டோ எடுக்கப்பட்ட 60 நொடிகளிலே வெளிவந்து ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியக்கடலில் ஆழ்த்திவிட்டது.


* 1965-ம்  ஆண்டு  வெளியான ‘போலராய்டு   ஸ்விங்கர்’ கேமரா , 


* போலராய்டு  கேமராவை  உருவாக்கிய  எட்வின் எச். லான்ட்,   அந்த  கேமராவில்   எடுத்த  தனது   போட்டோவுடன்...



எட்வின் உருவாக்கிய அந்த கேமரா உபயோகிக்கவும் எளிதாக இருந்தது. கேமராவின் மேற்பகுதியில் உள்ள துவாரத்தின் (Slit) மூலம் காகித படச்சுருளை நுழைத்து, இரு உருளைகள் (Roller) மூலம் கேமராவின் அடிப் பகுதியில் உள்ள ஸ்லாட் (Slot) பகுதிக்கு நகர்த்த வேண்டும். பின்பு நெகட்டிவ் பேப்பரை அடியில் உள்ள ‘ஸ்லாட்’டில் பொருத்த வேண்டும். அடுத்து கேமராவை இயக்க வேண்டும்.

படம் பிடிக்கும்போது விசையை இழுத்தால் பேப்பரும், நெகட்டிவ்வும் ஒன்றன் மேல் ஒன்று படிந்துசெல்ல உருளைகள் உதவும். உருளைகளின் அழுத்தத்தால் ரசாயனம் நிரம்பிய குப்பி, ரசாயனத்தை வெளியேற்றி நெகட்டிவ் முழுவதும் பரவச் செய்யும். ஒரு நிமிடம் கழித்து போட்டோகிராபர் கேமராவின் பின்புறமுள்ள மூடியை (Flap) திறந்தால் முழுவதும் ‘டெவலப்’ செய்யப்பட்ட சிப்பியா (Sepia) கலர் பிரிண்ட் வெளியே வரும். இதுதான் போலராய்டு கேமராவின் ‘கையில காசு வாயில தோசை’ சாராம்சம்! உலக மக்களை இது பெருமளவு கவர்ந்ததால், எக்கச்சக்கமாக விற்பனையானது.

1965-ம் ஆண்டு ‘போலராய்டு ஸ்விங்கர்’ கேமரா அறிமுகமானது. இது முழுவதும் பிளாஸ்டிக்கால் உருவான கவர்ச்சியான கேமரா. பட்டனை தட்டினால், படப்பிடிப்புக்கு தேவையான வெளிச்சம் இருக்கிறதா?.. இல்லையா?.. என்பது ‘வீவ் பைண்டரில்’ தெரியும். வெளிச்சம் போதாது என்றால் 'ப்ளாஷ்’ பயன்படுத்த வேண்டியதிருக்கும். படம் எடுத்து முடித்ததும் விசையை இழுத்து போட்டோவை எடுத்துவிடலாம். 60 நொடிகளில் போட்டோ கைக்கு வந்துவிடும். போலராய்டு ஸ்விங்கர் கேமரா 1963-ம் ஆண்டு 20 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. பிற்காலத்தில் 60 நொடி என்பது 10 நொடியாக குறைந்தது.

1972-ம் ஆண்டு ‘SX-70’ என்ற நவீன போலராய்டு கேமரா வெளியானது. இதை மடித்து எடுத்து செல்ல முடியும். இது மோட்டார் பொருத்தப்பட்ட ‘SLR’ கேமரா. இது அறிமுகப்படுத்தப்பட்டபோது ‘உலகத்தில் இதுதான் முதல் நவீன கேமரா’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது. உலகமே பாராட்டிய இந்த கேமராவை ‘லைப்’ பத்திரிகையும் பாராட்டியது. அட்டைப்படத்தில் அந்த கேமராவை அச்சிட்டு ‘The Most Amazing Camera Ever Produced’ என்ற வாசகத்துடன் பிரசுரித்தது.

எட்வின் எச்.லான்ட் இந்த கேமரா தயாரிப்பு துறையில் தன்னிகரற்று விளங்கினார். தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார். 1977-ம் ஆண்டு அவர் தனது 500-வது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பெற்றார். 1983-ல் 1000 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார். அப்போது அவரது நிறுவனத்தில் 13 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர். 1991-ல் 82 வயதில் அவர் மரணமடைந்தார். இதில் பெரிய சோகம் என்னவென்றால் உலகப்புகழ்பெற்ற அவரது நிறுவனம், 2001-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி திவாலானது. அதன் பங்கு தாரர்களில் ஒருவர் அதனை 2002-ம் ஆண்டு விலைக்கு வாங்கி இன்றும் அதே பெயரில் நடத்தி வருகிறார்.

* ப்ளாஷ்  இணைக்கப்பட்ட  நிலையில் தயாரிக்கப்பட்ட  பழங்கால  கேமரா

* 1925-ம்   ஆண்டு   டாக்டர்  பால் வீர் கோட்டர்  உருவாக்கிய  ப்ளாஷ்  பல்பு




உலகின் முதல்   ‘ப்ளாஷ்  லைட்’

கேமராக்களுக்கு ‘ப்ளாஷ் லைட்’ மிக அவசியம். ஹென்றி பாக்ஸ் டால்போட் (Henry Fox Talbot) என்பவர்தான் ப்ளாஷை பயன்படுத்தி, 1852-ல் முதல் போட்டோவை எடுத்தார். அதாவது 163 ஆண்டுகளுக்கு முன்பு..

அவர் எப்படி ப்ளாஷை உருவாக்கி உபயோகப்படுத்தினார் தெரியுமா?

ஒரு கண்ணாடி ஜாடியில் உலோகக் கம்பிகள் மற்றும் தகடுகளில் மின்சாரத்தை சேகரித்து, அதை உயர்சக்தியில் பிரகாசமாக எரியவிட்டு பொருட்களின் மீது விழச் செய்தார்.

 அவருக்கு முன்னால் இருந்தவர்கள் ரசாயனப் பொருட்களை ஆவியாக்கி அதை எரியவிட்டு தேவையான இடத்தில் பிரகாசமாக வெளிச்சம் படும்படி செய்தனர். அவர்கள் எலுமிச்சையையும் (Lime), மக்னீஷியம் பவுடரையும் பயன் படுத்தி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட குடுவைகளில் நிரப்பி மின் பொறி மூலம் பற்ற வைத்தனர்.

 அப்போது வெடி சப்தத்துடன் வெளிச்சம் பரவி, பின்னர் புகை வெளிவரும். எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் வெடி சத்தம் எதிரில் உள்ளவர்களை பயமுறுத்தியது. சில சமயங்களில் தீப்பொறி அவர்கள் மீது பட்டு எரிச்சலடைய செய்தது. இப்படித்தான் அந்த காலத்து ப்ளாஷ் இருந்தது.

* இதுதான்  உலகின் முதல்  ப்ளாஷ் லைட்

* 163  ஆண்டுகளுக்கு  முன்பு  ப்ளாஷ் பயன்படுத்தி  உலகத்தின்  முதல்   போட்டோவை  எடுத்த ஹென்றி பாக்ஸ் டால்போட்



கேமராக்களை சிறிய வடிவில் (Miniature) உற்பத்தி செய்யத் தொடங்கியவுடன், ப்ளாஷ் கருவிகளை எளிமைப்படுத்தும் ஆராய்ச்சியும் தொடர்ந்தது. 1925-ல் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த டாக்டர் பால் வீர் கோட்டர் (Dr. Paul Vierkotter), மக்னீஷியம் பாயிலை (Foil)உபயோகித்து ஒரு பல்பை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றார். குறிப்பிட்ட அளவு பாயிலை கண்ணாடி பல்புக்குள் நிரப்பி அதன் மூலம் எரியச் செய்தார். இதனால் மக்னீசியம் பவுடர் வெளியில் வெடித்துச் சிதறும் போது ஏற்பட்ட ஆபத்து குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரே இதை மேம்படுத்தி வெடிக்கக்கூடிய அலுமினியம் பாயிலை குறைத்து ஆக்சிஜன் நிரம்பிய விளக்கின் மூலம் எரியச் செய்தார். இதிலிருந்துதான் பிரசித்தமான ப்ளாஷ் பல்ப் வடிவமைக்கப்பட்டது. 

ஆரம்ப காலத்தில் இவை 75 வாட் பல்பாக இருந்தது. இதனால் வெடியும், புகையும் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பான, எளிதில் உபயோகிக்கக்கூடிய ப்ளாஷ் பல்ப் உருவானது.

1960-களில் பிளாஷ் பல்ப் மற்றும் ப்ளாஷ் கியூப்ஸ் (Cubes) சிறிதாகவும், பாதுகாப்பானதாகவும் உருமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் கேமராக்கள் ‘புல்ட் இன் ப்ளாஷ¨டன்’ (builtin flash) தயார் செய்யப்பட்டு சந்தைக்கு வந்தது.

நன்றி : dailythanthi.com


Disqus Comments