தனது ஆடைகளை கழுவுவதற்கு செலவிடப்பட்ட 6 ஆறு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன இதுவரை செலுத்தாததன் காரணமாக உடனடியாக அந்த கட்டணத்தை செலுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனியார் ஹோட்டல் ஒன்றிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ஹர்ஷ டி. சில்வா தெரிவித்தார்.
இது மிகவும் பெரிய அநியாயமாகும். இவ்வாறு ஆடை கழுவுவதற்கு பதிலாக புதிய ஆடைகள் வாங்கி அணியலாமே என்றும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
தனது ஆடைகளை கழுவுவதற்கு மூன்று மாதங்களில் 6 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா கட்டணத்தை முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன சினமன் லேக் ஹோட்டலுக்கு செலுத்தாததன் காரணமாக உடனடியாக குறித்த கட்டணத்தை செலுத்துமாறு தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் ஒப்படைத்தார். இது மிகவும் பெரிய அநியாயமாகும். இதற்கு முன்னாள் பிரதமருக்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆடைகளை வாங்கி அணிவது செலவு குறைந்ததாக காணப்படும்.
மேற்படி கடந்த வருடம் நவம்பர் மாதம் மாத்திரம் 3 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா இதற்கென்று செலவிடப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக நோக்கும் போது ஒரு மாதத்திற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இதற்கென செலவிடப்பட்டுள்ளது என்றார்.