(Cader Munawwer) வன்னி மக்களைப் பொறுத்தவரை என்றுமில்லாத அளவுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த கால உள்நாட்டுப் போரினால் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் நம் வாழ்வைச் சீராக்கிச் செப்பனிட வேண்டிய தேவைப்பாடு நமக்கிருப்பதால், இந்தத் தேர்தலில் நாம் மிக நிதானத்துடன் சிந்தித்துச் செயற்பட வேண்டி இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியளார்கள் சந்திப்பொன்றிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.இச்சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்
நடந்து முடிந்த போர் நம் வாழ்க்கையில் ஆறாத ரணங்களை ஏற்படுத்திச் சென்று விட்டது. உயிர் இழப்புகளும் பொருள் இழப்புகளும் அங்க அவயங்களின் இழப்புகளும் மாத்திரமன்றி நமது நிம் மதியையும் நாம் இழந்து தவிக்கின்றோம்.
வன்னியின் பெரும்பாலான வீடுகளில் குறைந்த பட்சம் ஒரு விதவைப் பெண்ணாவது இருக்கிறார். கையையோ, காலையோ இழந்த ஒரு பிள்ளையாவது இருக்கிறார். யுத்தத்தின் கொடூரத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் இருக்கிறார். தொழிலை இழந்து போன ஓர் இளைஞன் இருக்கிறார். பொருளாதரத்தையெல்லாம் இழந்ததினால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் ஏங்கும் ஒரு வயது வந்த பெண் இருக்கிறார். பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க வசதியில்லாத சின்னப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரதும் எதிர்கால வாழ்வில் ஓரளவாவது சந்தோஷத்தையும் நிம்மதியையும் வழங்குவது யார்..? இந்தக் கேள்விக்கு நாம் சரியான விடையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
சாதாரணத் தமிழ் மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றியே தங்களை மட்டும் வளர்த்துக் கொண்ட தமிழ்த் தலைமைகளை நாம் அறிவோம். தனி ஈழம் என்றும் தமிழ் ஈழம் என்றும் சொல்லிச் சொல்லி ஏழைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை எரிநெருப்புக் கிடங்கினுள் தள்ளிவிட்டவர்களைப் பற்றியும் நாம் நன்கு அறிவோம்.
இன்றைய அரசியலில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்கும ;அரசியல்வாதிகளைப் பாருங்கள். இவர்களில் எத்தனை பேர் இழப்புகளைச் சந்தித்தார்கள்? இவர்களில் எத்தனை பேர் வறுமையில் வாடுகிறார்கள்? இவர்களின் குடும்பத்தில் விதவைகளாக இருப்பவர்கள் எத்தனை பேர்? இவர்களின் குடும்பத்தில் அங்கவீனர்களாக இருப்பவர்கள் எத்தனை பேர்? இவர்களுடைய எத்தனை பிள்ளைகள் பாடசாலை சென்று கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கீல்லாம் ஒரே விடை ''அப்படி ஒருவரும் இல்லை'' என்பதுதான்.
இந்த அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பமும் ஆனந்தமாக வாழ்கிறார்கள். சகல சுகபோகங்களையும் அனுபவித்தபடி வாழ்கிறார்கள். இவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்து, சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளுக்குக் கவலை, கஷ்டம், கண்ணீர் என்று எதுவுமே இல்லை. பசி, பஞ்சம் , பட்டினி என்று எதுவுமே இவர்களுக்குக் கிடையாது.
இவை எல்லாமே சாதாரண தமிழ் மக்களான நமக்குத்தான். உரிமை என்றும் போராட்டம் என்றும் காலத்திற்குக் காலம் நமது வாக்குகளைக் கபளீகரம் செய்து தாங்கள் மட்டும் வாழ்க்கையை அனுபவிக்கும் சந்தர்ப்பவாதிகளே நமது அரசியல்வாதிகள் என்பதைப் புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இத்தகையோருக்குப் பாடம் புகட்டும் நேரமும் இப்போது நெருங்கிவிட்டது.
எந்த அரசாங்கம் வந்தாலும் பின் கதவால் சென்று தங்களதும் தமது குடும்பத்தினரதும் தனிப்பட்ட தேவைகளை மட்டும் பெற்றுக் கொண்டு, அப்பாவித் தமிழ் மக்களை நட்டாற்றில் கைவிட்டு விடுகின்றனர்.
சாதி, சமயம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் நான் தமிழ் மக்களுக்குச் செய்த சேவைகளை வன்னி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தொழில் வாய்ப்புகள், கல்விக்கான சேவைகள் , விதவைகளுக்கான உதவிகள், மீளக் குடியேறியோர்க்கான கொடுப்பனவுகள், வீடுகள் வழங்குதல், தொழிற் பயிற்சிகள் மற்றும் மீன்பிடி, விவசாயம், வீதிகள் அமைத்தல், வியாபாரம், சுகாதாரம், மின்சாரம் என்பன போன்ற சகல துறைகளிலும் வன்னித் தமிழ் மக்களுக்கு உதவி செய்து வருகின்ற பணிகள் இந்தத் தேர்தலின் பின்னர் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கப்படும் என்பது உண்மையும் சத்தியமுமாகும்.
தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் வென்றெடுக்க முடியும்.
இந்தத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக நான் போட்டியிடுவதை எல்லோரும் அறிவோம். இந்தத் தேர்தலில் நான் வெல்லப் போவதில் எந்தச் சந்தேகங்களும் இல்லை அதன் மூலம் வன்னி மக்களின் வருங்காலத்தை வசந்த காலமாக்க வேண்டும். அத்தோடு வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தியைப் பன்மடங்காக்கவும் வேண்டும் என்பதே எனது இலக்கு எனவே சகல பேதங்களையும் மறந்து நாம் ஒன்று படுவோம்.