எகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பாடிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விடியற்காலை நேரத்து "சுபுஹ்" தொழுகைக்கு அழைக்கும் பாங்கில், "தூங்குவதை விட தொழுகை நன்மை தரும்" என்ற வாசகம் வரும்.
நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள கஃப் அல் தவார் என்ற ஊரின் ஒரு பள்ளிவாசலில் வேலைபார்க்கும் முகமது அல் மொகாசி , அந்த வாசகத்தை சற்று மாற்றி "ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடுவதை இட தொழுகை நன்மை தரும்" என்று பாங்கு சொன்னார்.
அவ்வூர்வாசிகளுக்கு அது பிடிக்காததால் அவருக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்த மொகாசி, நாட்டின் அதிபர் தலையிட்டு தன்னை பிரச்சினையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரினார்.
விசாரணை முடியும்வரையில் அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.