Friday, June 6, 2014

2014 - க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 20ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தாங்கள் வழங்கிய விபரங்கள் யாவும் சரியானவை என்பதை கட்டாயமாக உறுதிப்படுத்த வேண்டும். விண்ணப்பப்படிவம் அனுப்பி பின்னர் எக்காரணம் கொண்டும் பரீட்சை நிலையம், விண்ணப்பித்த மொழி, பாடங்களை மாற்றுதல், புதிதாக பாடங்களை சேர்த்தல் போன்றவை பின்னர் மாற்றம் செய்யப்பட மாட்டாது.

ஆதலால் விண்ணப்பப்படிவத்தை சரியாக பூர்த்தி செய்த பின்னர் அதிபர் அதில் குறிப்பிடப்பட்ட விபரங்களை பரீட்சித்துப் பார்த்து உண்மையானவையும் சரியானவையும் என விண்ணப்பத்தின் ஒவ்வொரு பிரதியிலும் ஒப்பத்தை பதவி முத்திரையையும் இட்டு தனித்தனியே உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெயர்களை அவரது பிறப்புச் சான்றிதழில் காணப்படும் விதத்திலேயே உட்படுத்தல் வேண்டும். பெயர்களிலுள்ள எழுத்து வித்தியாசங்களும் அப்பெயர்கள் காணப்படும் ஒழுங்கிலுள்ள தவறுகளும் தட்டச்சில் பொருத்தலினால் ஏற்படும் தவறுகளையிட்டும் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஏதேனும் ஒரு பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருப்பின் அது நேர்த்தியாக வெட்டப்பட்டு சரியான பெயர் மீளஎழுதப்பட்டு பாடசாலை தலைவரின் முழு ஒப்பத்தினால் அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.

பாடசாலையில் உயர்தர வகுப்பிலுள்ள விண்ணப்பதாரிகளுக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் அவ்விண்ணப்பதாரியின் பெயரை இப்பாடசாலை விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.

விண்ணப்பப்படிவத்தின் இரண்டு பிரதிகளிலும் பரீட்சார்த்திகளின் தொடர் எண், பெயர், பாடஎண்கள் என்பன சரியாக பதியப்படல் வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என். ஜே. புஷ்பகுமார சகல அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
Disqus Comments