Friday, June 6, 2014

சீரற்ற வானிலையால் பலியானோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.

புலத்சிங்கள – அகல்ஓயா பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அங்குருவாதொட்ட பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன நபரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சீரற்ற வானிலையினால் 29 ஆயிரத்து 210 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மழை வெள்ளம் மற்றும் மண்மேடு சரிவுகள் காரணமாக நான்காயிரத்து 498 குடும்பங்களைச் சேர்ந்த, 18 ஆயிரத்து 285 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தற்காலிகமாக 89 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு பகுதியிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகவில்லை எனவும், வெள்ளம் வடிந்தோடுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் களுத்துறை, காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டுகின்றார்.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில், மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவிக்கின்றது
Disqus Comments