Monday, June 9, 2014

தம்புள்ளை கோயில், பள்ளிவாசலுக்கு மாற்று இடம்: பிரதமர்

தம்புள்ளை கோயில் மற்றும் பள்ளிவாசலை பொருத்தமான இடத்தில் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன உறுதியளித்தார்.

கம்பளை தொழுவையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் முஸ்லிம் தூதுக்குழுவொன்று  பிரதமரை டி.எம். ஜயரட்னவை இன்று காலை சந்தித்து தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார வைத்திய பணிப்பாளர் என்.எம்.எம். இக்பாலின் ஏற்பாட்டின் பேரில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவர் கே.என். தீன் பேரவையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஸ்மா ஆப்தீன் , முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என். எம். அமீன் மடவளை வை.எம்.எம்.ஏ தலைவர் எம். எச்எம். றிஸ்மி ஆகியோரை உள்ளடக்கிய இத்தூதுக்குழுவினர் பிரதமரிடம் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான தற்போதைய நிலவரங்களை எடுத்துக் கூறினர்.

தம்புள்ளை பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் புனித பூமி ஆகிய காரணங்களின் அடிப்படையில் அப்பகுதி முஸ்லிம்கள் பள்ளிவாசலை மற்றுமொரு இடத்தில் அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர் என்ற விடயமும் பிரதமரிடம் தூதுக்குழுவினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

தம்புள்ளை பள்ளிவாசலை மட்டுமன்றி கோயிலையும் பொருத்தமானதும் மக்கள் விரும்பக்கூடியதுமான இடத்தில் அமைக்க வேண்டும். எனவே இவற்றை அமைப்பதற்கான காணிகள் தொடர்பாக ஆராயுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுப்பதாகவும் பிரதமர் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.

நாட்டில் சகல இனத்தவர்களினதும் சமய ரீதியான உரிமையை உறுதிப்படுத்துவது அவசியம் என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதியும் தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அக்கறையும் செற்பட்ட வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
Disqus Comments