கட்சிக்குள் ஏற்படக் கூடிய பிரச்சினை களுக்கு அதற்குள்ளிருந்தபடி தீர்வு காண்பதனை
விடுத்து சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவது புத்திசாதுரியமாகாதென
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர்.
எத்தகைய போராட்டமானாலும் கட்சிக்குள்ளிருந்தபடி அதனை நடத்திச் செல்வோமே தவிர
சர்வதேசத்தின் சதி வலையில் சிக்கி கட்சி விட்டு கட்சி மாறி காட்டிக்கொடுக்க
மாட்டோமெனவும் அவர்கள் நேற்று உறுதியளித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்
கலந்துகொண்ட அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ரெஜினோல்ட் குரே, சி. பி. ரத்னநாயக்க,
பியசேன கமகே மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேக்கர ஆகியோரே
மேற்கண்டவாறு தமது உறுதிப்பாட்டை அறிவித்தனர்.
சுதந்திரமடைந்த இலங்கையின் அரசியல் யாப்பிலிருந்து விரும்பியோ விரும்பாமலோ
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அதில் உள்ளடக்கப்பட்டது. இந்த அதிகார
முறைமை இலங்கைக்கு ஒரு காலக்கெடு. ஜேர். ஆர். ஜெயவர்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட
இந்த முறைமைக்காக நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் குற்றம் சுமத்துவது
எதற்காக?
இதற்கு முன்னர் பதவியிலிருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இது குறித்து அக்கறை
செலுத்தியிருக்காத போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென ஐ. ம. சு.
மு. உறுப்பினர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை உரிய சந்தர்ப்பத்தில் நிறைவேற்றுவதாக
ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
எமது போராட்டம் கட்சிக்குட்பட்டது. உண்மையில் எதிரணியை விட இந்த விடயத்தில் நாம்
தான் நெருக்கமாக இருக்கிறோமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நாமும்
நீண்ட காலமாக முன்வைத்துள்ளோம். எனினும் இதனை தற்போதைய ஜனாதிபதியினால் தான்
நிறைவேற்ற முடியுமே தவிர புதிய தொரு ஜனாதிபதியினால் முடியாதென தேசிய மொழிகள், சமூக
ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எமது கோரிக்கைகள், போராட்டங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி
விதிமுறைகளுக் குட்பட்டதாகவேயுள்ளன. சரியான சந்தர்ப்பத்தில் இதனை நிறைவேற்ற
நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி யவர்களும் வாக்குறுதியளித்துள்ளார்.
எனினும், இலங்கை மீது தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்த விரும்பும் மேற்குலக நாடுகளுக்கு
நாட்டின் தற்போதைய அமைதி நிலைமை பெரும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் அமைதியின்மையை தோற்றுவிக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு
பிரச்சினைகளை நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை
பார்க்கின்றன. அதன் ஒரு அம்சமாகவே பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான
தேர்தல் கள நிலவரத்தை இந்த நாடுகள் தோற்றுவிதுள்ளன எனவும் அவர் கூறினார்.
ரெஜினோல்ட் குரே
சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே கருத்து
தெரிவிக்கையில் :
எதிரணியினரின் பொது வேட்பாளர் தெரிவானது வெளித்தோற்றத்தில் மட்டுமே மைத்ரிபாலவின்
முகம். ஆனால் அதன் பின்புறம் இருந்து அவரை முழுவதுமாக இயக்குவது சர்வதேச நாடுகள்
என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக நீண்டகாலமாக பதவி வகித்து வந்த
மைத்திரிபால. இத்தனை வருடங்களுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க
வேண்டுமெனக் கேட்பது வயதுபோன காலத்தில் வாய்க்கு புளிப்பு தேவைப்படுவது போல உள்ளது
எனவும் அவர் கூறினார்.
ஒருவருக்கு எவ்வளவு தான் பிரச்சினையிருந்தாலும் இன்னொருவரின் கழுத்தை பிடித்து
தொங்குவதென்பது சாதாரணமாகாது. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நாட்டின்
ஜனநாயகத்தை பாதுகாக்க முற்படக்கூடாது. எதிரிகளுக்கு இலாபம் கிட்டாத வகையில் நாம்
நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முனைய வேண்டும். தேர்தலில் வாக்களிக்க முன்னர் நாம்
மீண்டும் பிரிவினைவாதத் திற்கும் பயங்கரவாதத்திற்கும் நாட்டை எடுத்துச்
செல்கின்றோமாவென உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்களெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிரணியின் பொதுவேட் பாளராக மைத்திரிபால தெரிவாகியிருப்ப தானது காகத்தின்
கூட்டில் குயில் முட்டையிட்டது போன்றதாகுமென வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி
ஜகசேக்கர கூறினார். சர்வதேசத்தின் சதித் திட்டத்தின் பின்னணியயிலேயே எதிரணியினர்
செயற்படுகின்றனர் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது. அமெரிக்காவில் விரிவுரை
செய்யவதற்காகவே சென்றதாக கூறிய ரணில்விக்கிரமசிங்க உண்மையில் அங்கு ஆட்சி மாற்றம்
பற்றிய விரிவுரையை கேட்டு வந்துள்ளார்.
இலங்கையிலும் அராபிய வசந்தத்தை ஏற்படுத்தப் போவதாக கூறிய ரணிலினால் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்ட முடியாமல் போய்விட்டது. அதனால். ஆளும்
தரப்பிலுள்ள ஒரு சிலரை தள்ளிச் சென்று எதிரணி அமைத்துள்ளார்.
மைத்திரி ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்க வேண்டுமென்பதே தூரகங்கள் மேற்கொண்டுள்ள
ஒப்பந்தமாகும். மைத்திரி. சிறிசங்கபோ ராஜாவைப் போன்று ஜனாதிபதியானதும் தனது கழுத்தை
வெட்டி ரணிலிடம் ஒப்படைக்கப் போகிறார் போலும்.
பொலன்னறுவையில் நெல், மணல் மாபியாவில் ஈடுபடுவதாக ரணில் மைத்திரிபாலவிற்கு குற்றம்
சாட்டியதனை மறந்து இன்று இவர்கள் இணைந்து அரசியல் நடத்துகின்றமை வேடிக்கை
யாகவுள்ளது.
ரணிலினால் ஏமாற்றப்பட்டு நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அப்பாவி மக்களின்
வாக்குகளாலேயே மைத்திரிபால தேர்தலில் வென்றார். ஆனால் இன்று அரசியல் இலாபம் கருதி
ஐ. தே. க.வுடன் இணைந்து கூட்டணியமைத்து தனது வாக்காளர்களுக்கு துரோகம்
இழைத்துவிட்டார்.
ஜனாதிபதியானதும் முதலில் 100 நாட்களில் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பேன் எனக்
கூறிய எதிரணி பொதுவேட்பாளர் தற்போது 24 மணித்தியாலங்களுக்குள் அதனை செய்து
காட்டுவதாக கூறியதும் முன்னே கால் வைத்தவர்கள் கூட பின்வாங்கி விட்டார்கள். இந்த
கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை. இதிலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது அதிகாரங்களை
கைப்பற்றப் பார்க்கின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா மாவட்ட மக்களுக்கு தான் துரோகம் இழைக்க மாட்டேனென தனியார்
போக்குவரத்து துறையமைச்சர் சி. பி. ரத்நாயக்க கூறினார். அரசியல் இலாபத்திற்காக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக உடைவதற்கு நான் எந்த வகையிலும்
உடந்தையாக இருக்க மாட்டேன்.
இணைய தளங்களில் தவறான செய்திகளை வழங்குவதன் மூலம் எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த சிலர்
முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய வளங்கள் அமைச்சர் பியசேன கமகே. தான் கட்சி மாறப் போவதாக வதந்திகள் உலா
வருகின்றன. எனக்கு கட்சி மாற வேண்டிய அவசியமுல் இல்லை என்னை அங்கு வருமாறு யாரும்
அழைக்கவுமில்லையெனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி. பாராளுமன்றம். மாகாண சபையென அனைத்திலும் நாம் பலப்படுத்தப்பட்டிருக்கும்
வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியினை அசைக்க முடியாதெனவும் அவர்
கூறினார்.
இச்செய்தியியாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ரெஜினோல்ட் குரே,
ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சு நடத்துமெனக் கூறினார்.
