Wednesday, March 25, 2015

தேசிய கீதத்தை தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் இசைத்தால் போதுமானது. - BBS

(எம்.எம். மின்ஹாஜ்) நாட்டில் நல்லாட்சி நிலவுவதனால் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாட வேண்டியதில்லை. தமிழ், அரபு, மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் இசைத்தால் போதுமானது.

இவ்வாறு சென்றால் தேசிய கொடியில் உள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோருவா்.  இதற்கு எதிர்ப்பு வெளியிட்டால் எம்மை இனவாதிகள் என்பார்கள் என பொது பல சேன அமைப்பின்  பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் தெரிவித்தார். 

உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சி இலங்கையில் நிகழ்கின்றமை நகைப்புக்குரியது. இந்த நல்லாட்சியில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும்  சாடினார்.

கிருலப்பனை பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடா்பில் அவா் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், தற்போது தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்கப்பட வேண்டும் என கோரப்படுகின்றது. தற்போது நாட்டில் நல்லாட்சியே காணப்படுகின்றது.  அதனால் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் இசைத்தால் போதுமானது. சிங்களத்தில் பாட வேண்டி தேவை கிடையாது.

நல்லாட்சியில் நாட்டின் பெரும்பான்மை இனத்தவா்களான சிங்களவா்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. ஆகவே தற்போது சிங்கள மொழிக்கு உரிய  வகையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.

 ஆங்கில மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஆகையால் தேசிய கீதம் தொடா்பிலான சா்ச்சை குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. தற்போது தேசிய மொழியில் பாடக்கோரும் போது அடுத்த தரப்பினா்  அரபு மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கோருவார்கள். இந்நிலையில் தேசிய கீதத்தை  சிங்கள மொழியில் இசைக்க வேண்டியதில்லை.

தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழியில் மாத்திரம் இசைத்தால் போதுமானது.

மேலும் நல்லாட்சி இவ்வாறே பயணத்தால் தேசிய கொடியில் உள்ள சிங்கத்தை அகற்றுமாறும் கோருவா்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் எம்மை இனவாதிகள் என்று கூறுவார்கள். 

உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சியே இங்கு நிலவுகின்றது. இந்தியாவில் 
கூட ஒரு மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது என்றார்.

(நன்றி - மடவளைநியூஸ்)
Disqus Comments