இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியின் போது வழங்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்புகள் சில பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தமைக்கு காரணம் நடுவர்களின் தீர்ப்பே என பங்களாதேஷ் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹசீனாவும் தமது அணியின் தோல்வி தொடர்பில் நடுவர்களை சாடியுள்ளார்.
மெல்பேர்னில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் பங்களாதேஷ் அணி வீரர்கள் மற்றும் அணியின் முகாமைத்துவத்தைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது அங்கு அழைப்பை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஹசினா, வீரர்களிடம் உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது; " நடுவர்கள் தவறான தீர்ப்பை வழங்காமல் இருந்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம்.இன்ஷா அல்லா, பங்களாதேஷ் எதிர்காலத்தில் வெற்றிபெறும். பங்களாதேஷ் ஒருநாள் உலக சாம்பியன்களாகும்" என்றார்.
தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வீரர்களை கவலையடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எனவே கவலைப்பட தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பங்களாதேஷ் பிரதமரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைவரொருவர் கிரிக்கெட் தொடர்பில் குறிப்பாக நடுவரின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடுவதானது ராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.