இன்று இந்த தாதியர் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டவர்களுக்கு வைத்தியசாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதே வேளை அண்மையில் என்னை சந்தித்த ஜேர்மன் நாட்டின் துாதுவர், அந்த நாட்டில் தாதியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் எடுத்துரைத்தார். இவ்வாறு சிறந்த பயிற்சிகளை பெற்றவர்களுக்கு அவ்வாறான வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றது. இது தொடர்பில் சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன் என வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தில் (International vocational academy) தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியதகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தின் தலைவர் லயண் சித்தீக் நதீர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சியினை நிறைவு செய்து கொண்ட தாதியர்களுக்கான நினைவு கேடயங்களையும் வழங்கி வைத்த அமைச்சர் றிசாத் பதியுத்தீன், இந்த நிறுவகம் மேற்கொண்டுள்ள பணியானது பாராட்டுக்குரியது எனவும், இதனது தலைவர் நதீர் அவர்கள் இப்படியான ஒரு கல்லுாரியினை நடத்திவருவது பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிட்டார்.