போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலாபம் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்றிரவு அப்பிரிவின் பொலிஸார் சிலர் சிலாபம் கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள மீனவக் கிராமத்திற்கு கால்நடையாகச் சென்றுள்ளனர். இதன் போது இவர்களைச் சந்தித்துள்ள பிரதேச சபை உறுப்பினர் அங்கிருந்தவர்கள் முன்னிலையில் கூடாத வார்த்தைகளினால் ஏசியுள்ளார். அத்தோடு தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறியுள்ளதோடு மதுபோதையில் இருந்தவரைப் போலவும் இவர் செயற்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினரை பொலிஸார் எச்சரித்த போதும் அவர் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் பொலிஸாரை அவமானப் படுத்தும் வகையில் நடந்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இப்பரிசோதனையின் போது அவர் மதுபானம் பாவித்திருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிலாபம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம். எஸ். முஸப்பிர்
புத்தளம்
23.03.2015