Tuesday, April 28, 2015

இரண்டு வருடம் மீதமாக இருக்கும் போது நாமா தோ்தல் நடாத்தச் சொன்னோம். - BBS

“தனது தோல்விக்கு பொது பல சேனா இயக்கமே பொறுப்பு கூறவேண்டும்” என்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணம் பிழையானது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியுற்ற பின்பும் தவறான வழியில் செல்வாராயின் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேரர்:

மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தும் மீண்டும் மீண்டும் அதே பாதையில் பயணம் செய்வது குறித்து கவலையடைய வேண்டியதை தவிர வேறு ஒன்று செய்ய முடியாது. இரண்டு வருடங்கள் இருப்பதற்கு முன்னர் தேர்தல் ஒன்றிற்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தது எங்கள் அமைப்பா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

என்றாலும் நாட்டை மீட்டத் தலைவர் என்ற வகையில் பொதுபல சேனா அமைப்பு மஹிந்த ராஜபக்ஷ மீது தொடர்ந்தும் கௌரவம் வைத்திருக்கும் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார். அதேபோன்று பொதுபல சேனா அமைப்பு இனி எந்தவொரு தலைவருக்காகவும் முன்னிற்காது என்றும், இளைஞர் சமூகம் தம்மீது வைத்த நம்பிக்கையை தொடர்ந்து பேணு வேண்டுமென்றும் ஞானசார தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரான்ஸ் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் பொதுபல சேனா அமைப்பு மேற்குலக நாடுகளுடன் இணைந்து தன்னை தோற்கடிக்கச் செயற்பட்டதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments