Monday, May 18, 2015

மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு!!

*மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.*

*ஆசிரியர்கள் மாணவர்களை இலங்கையின் வரலாற்றுப் புராதண இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவின் நிமிர்த்தம் அழைத்துச் செல்கின்ற போது அவ் வரலாற்றுப் புராதண இடங்கள் தொடர்பான அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி அழைத்துச் செல்ல வேண்டும்.* 

*இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களை பெரும்பாலும் கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம், அவ்வாறு கல்விச் சுற்றுலா செல்லும் போது இலங்கையின் வரலாற்றுப் புராதண இடங்களாக சீகிரியா, அநுராதபுரம், பொலனறுவை மற்றும் இன்னும் பிற இடங்களுக்கும் அழைத்துச் செல்வதுண்டு.*

*இலங்கையின் வரலாற்றுப் புராதண இடங்களையும், பொருட்களையும்,காட்சிகளையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடுமையான சட்டங்களையும், அவற்றை சேதத்திற்கு உட்படுத்தினால் அதற்கான கடுமையான தண்டனைகளையும் அமுல்படுத்தியிருக்கின்றது என்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.  அண்மையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரு மாணவியும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு யுவதியும் கைது செய்யப்பட்ட விவகாரம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.*

*இலங்கையின் வரலாற்றுப் புராதண இடங்களை மாணவர்கள் பார்வையிடச் செல்லும் போது அங்கே தன்னுடைய பெயரை எழுதுவதையோ, சுரண்டுவதையோ, வரலாற்றுப் பொருட்களுக்கு சேதத்தை உண்டாக்குவதையோ முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.*

*மேலும் சில வரலாற்றுப் புராதண இடங்களில் புகைப்படம் எடுப்பதற்கு கூட
அனுமதிக்கப்பட்டிருக்காது அவ்வாறான இடங்களில் புகைப்படம் எடுப்பதையோ, சம்பந்தப்பட்ட இடங்களை தொடுவதையோ மாணவர்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.*

*கடந்த மாதங்களில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரு மாணவி சீகிரியச் சுவரில் தனது பெயரை எழுதியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களது முயற்சினால் விடுதலையாகியிருந்தார் அதே போல் மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சீகிரியா பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதாக கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தார். பின்னர் இவ்விடயம் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது மன்னிப்பின் பிரகாரம் குறித்த யுவதி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பதையும் கவனத்தில் கொண்டவர்களாக மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.*

*அரசாங்கம் இலங்கையின் வரலாற்றுப் புராதண இடங்களையும், சின்னங்களையும், பொருட்களையும் பேணிப்பாதுகாப்பதற்கு இவ்வாறான சட்டங்களையும், தண்டனைகளையும் நடைமுறைப்படித்திருப்பது அவற்றைப் பாதுகாப்பதற்காகவே அன்றி மாணவர்களையோ, பொதுமக்களையோ தண்டிப்பதற்காக அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.*

*ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு முன்னர் இவ்வாறான விடங்கள் தொடர்பாக தெளிவுறுத்தி அழைத்துச் செல்ல வேண்டும். இவ்விடயத்தின் மாணவர்கள் மாத்திமன்றி புராதண இடங்களுக்கு சுற்றுலாச் செல்லும் இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்களும் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இலங்கையில் உள்ள வரலாற்று புராதண இடங்களையும், பொருட்களையும், சின்னங்களையும் மற்றும் இதர பொருட்களையும் பாதுகாப்பது இலங்கைப் பிரஜைகளான எமது கடமை என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்.*
Disqus Comments