சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ட்விட்டரில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இன்று இணைந்துள்ளார்.
ட்விட்டரில் சேர்ந்த 45 நிமிடத்திற்குள்ளாகவே 2 லட்சத்து 17 ஆயிரம் ஆதரவாளர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
ட்விட்டரில் ஏற்கனவே அதிபர் ஒபாமாவின் பெயரில் உள்ள கணக்குகள் அனைத்தும் அவருக்காக மற்ற அதிகாரிகள் நடத்தும் கணக்குகளாகவே இருந்த நிலையில், President Obama@POTUS என்ற பெயரில் அதிபர் ஒபாமா சொந்தமாக ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ளார்.
இந்த புதிய ட்விட்டர் கணக்கு மூலமாக அமெரிக்க மக்களுடன் அவர் நேரடியாக உரையாடவுள்ளார்.
ட்விட்டரின் முகப்பு புகைப்படமாக தன்னுடைய சிரிக்கும் புகைப்படத்தையும், கவர் புகைப்படமாக அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்ற செல்மா சிவில் உரிமைகள் பேரணியின் 50 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படத்தையும் அவர் வைத்துள்ளார்.
தன்னுடைய முதல் ட்வீட்டில் “ஹலோ ட்விட்டர்! இது பராக். உண்மையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் எனக்கு சொந்தமாக கணக்கு கொடுத்திருக்கிறார்கள்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட ஒபாமா, தன்னைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இடத்தில் “அப்பா. கணவன் மற்றும் அமெரிக்காவின் 44 ஆவது அதிபர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் போன்றோர் ட்விட்டரில் ஒபாமாவை பின் தொடர்ந்துள்ளனர்.
வருகிற அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஹிலாரி கிளிண்டன் மட்டும் அவரை பின் தொடரவில்லை.