பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாராளுமன்றத்தை விரைவில் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் முறை மாற்ற யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு பாராளுமன்றத்தை கலைப்பதா?
அல்லது தேர்தல் முறையை மாற்றாமல் பாராளுமன்றத்தை கலைப்பதா என்பது தொடர்பாகவே மூவரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். எவ்வாறெனினும் தேர்தல் முறை மாற்றத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்வதற்கே நேற்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்ற யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமலேயே பாராளுமன்றத்தை கலைத்துவிடுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் தேர்தல் இன்று அல்லது நாளை பாராளுமன்றம் கலைக்கப்படுமிடத்து ஜூலை மாத நடுப்பகுதியில் பாராளுமன்றம் தேர்தல் நடைபெறும். நேற்றைய தினமும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்டநேரம் ஜனாதிபதி செயலகத்திலும் ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்துகொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். அதற்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அந்தவகையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி
இன்னும் செயற்பாட்டு மட்டத்திலேயே உள்ளது.
இதற்கு இடையில் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சுதந்திரக் கட்சியின் மஹிந்த ஆதரவு அணியும் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றன. ஆனால் சுதந்திரக் கட்சியானது தேர்தல் முறையை மாற்றிவிட்டே தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று கூறிவருகின்றது. இந்நிலையில் சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.