வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள கொலன்னாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடுவளை கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மரியாள் கல்லூரி, முனிதாஸ குமாரதுங்க மகா வித்தியாலயம், இஹல போமரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு வலயத்திற்குட்பட்ட மட்டக்குளி சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், பாலத்துறை சங்க போதி வித்தியாலயம், அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயம், மாளிகாவத்தை தாருசலாம் முஸ்லிம் வித்தியாலயம், ஆகியவற்றுக்கும் இன்றும் , நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
களனி கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வானை மகா வித்தியாலயத்திற்கும் இன்றும் , நாளையும்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர ஹோமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட மயாதுன்ன மகா வித்தியாலயம், பஹல ஹங்வெல்ல கனிஷ்ட வித்தியாலயம், பஹத்கம ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், துன்னானை சுமன போதி வித்தியாலயம், ஆட்டிகல கனிஷ்ட வித்தியாலயம், ஜல்தர கனிஷ்ட வித்தியாலயம், முல்லேகம கனிஷ்ட வித்தியாலயம், படவள கனிஷ்ட வித்தியாலயம், பானலுவ கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றுக்கும்இன்றும் , நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் பாடசலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இடர்நிலைமைகள் காரணமாக மறு அறிவித்தல் வரை சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் 46 பாடசாலைகளும் , இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட கல்வி வலயத்திற்குடபட்ட 6 பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ். வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மத்திய மாகாணத்தில் வழமை போன்று பாடசாலைகள் இயங்கும் என மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்கள் ஏதும் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படின் அது தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும அவர் கூறினார்.
இதேவேளை, வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலை சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிப்பது கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கு வசதியான உடையில் பாடசாலைக்கு சமூகம் தர முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வௌ்ளம் மற்றும் மணசரிவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல்களை திரட்டுவதற்காக 24 மணித்தியாலங்களும் செயற்படும் விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
0112 78 63 84, 0712 365 965 அல்லது 0718 838 212 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.