தமிழக முதல்வராக, 6-வது முறையாக இன்று செல்வி ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர் முதல்வராக பதவியேற்றதற்காக ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், பகல் 12.08 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நாட்டுப் பண் சுருக்கமாக இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகிய 14 பேரும் கூட்டாக அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.
அடுத்ததாக கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, மருத்துவர்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சிமி ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக நாட்டுப்பண் முழுமையாக இசைக்கப்பட்டது.
இதேவேளை, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன், திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, சேகர்பாபு, வாகை.சந்திரசேகர், மா.சுப்பிரமணியம் ஆகியோரும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் 14-வது சட்டப் பேரவையின் பதவிக்காலம் மே 22-ம் திகதியுடன் (நேற்று) முடிந்தது. புதிய சட்டப்பேரவையை அமைப்பதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 16-ம் திகதி நடந்தது. 232 தொகுதிகளில் நடந்த தேர்தலில், அதிமுக 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது.
அதிக இடங்களை பிடித்த அதிமுக, தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் 2 வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து, அதிமுக புதிய எம்எல்ஏக் கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஆளுநர் ரோசய் யாவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது, 133 எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதம், அமைச்சர்கள் பட்டியலை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் தொடர்பான பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.