ஐந்து வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது. யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.
அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத்தம் பெயரளவில் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அரசுக்கும் ஐ.எஸ் மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான யுத்தம் தொடர்கின்றது. இந்த நிலைமையால் அப்பாவி மக்களின் உயிர்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.
இந்த ஆயுதக் குழுக்களை நசுக்குகின்றோம் என்ற பெயரில் சிரியா அரசும் அந்த அரசுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளும் அப்பாவி மக்கள்மீதே குண்டுகளை போடுகின்றன.
மறுபுறம் அமெரிக்காவும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழித்தல் என்ற பெயரில் அப்பாவி மக்களைத்தான் அழிக்கின்றது. இதனால் உயிரிழப்புக்கள் தினமும் அதிகரிக்கின்றன. இப்போதுவரை நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று சொல்லப்படுகின்றபோதிலும், உண்மை யில் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. முற்றுகையிடப் பட்டிருக்கும் இடங்களில் இடம்பெற்றிருக்கும் இழப்புகளை எடுத்துப்பார்த்தால் உயிரிழப்புகள் 5 லட்சத்தைத் தாண்டும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இவ்வாறு இந்த கொடூர யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் துருக்கியும் ஒன்று. சிரியா அரசுக்கு எதிராகவும் அங்கு போராடும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் துருக்கி தாக்குதல் நடத்தி வருகின்றது.
சிரியா அரசுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சிகளின் ஆயுதக் குழுக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் துருக்கி வழங்கி வரும் அதேவேளை, அமெரிக்காவுடன் இணைந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றது.
அது மாத்திரமன்றி சிரியா யுத்த களத்தில் ஐஸ்.எஸ் இற்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா அனுசரணை பெற்ற குர்திஷ் போராளிகளுக்கு எதிராகவும் துருக்கி சண்டையிட்டு வருகின்றது. இதனால், துருக்கி நாடு கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.
சிரியா யுத்தம் தொடங்கப்பட்டது முதல் துருக்கி பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அண்மைக் காலமாக அந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. துருக்கி விமான நிலையம்மீதான தாக்குதல், திருமண வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் என பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஐ.எஸ் பயங்கரவாதிகளும் சிரியா குர்திஷ் போராளிகளுமே இந்தத் தாக்குதல்களை நடத்துவதால் இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள் துருக்கி இன்று தள்ளப்பட்டுள்ளது. அதற்கான யுத்த வியூகத்தை வகுத்து துருக்கி இப்போது களமிறங்கியுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ் இற்கு எதிரான விமானத் தாக்குதலை மாத்திரம் நடத்தி வந்த துருக்கி சிரியாவுக்குள் இராணுவத்தை அனுப்பவில்லை. ஆனால், சிரியா-துரு க்கி எல்லையான வட சிரியாவில் சில இடங்களை சிரியா குர்திஷ் போராளிகள் கைப்பற்றியதன் பின்தான் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும் முடிவை துருக்கி எடுத்தது.
சிரியாவில் ஐ.எஸ் இற்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த குர்திஷ் போராளிகள் வட சிரியாவில் ஐ.எஸ்களின் வசமிருந்த சில இடங்களை கைப்பற்றினர். துருக்கியில் நீண்ட காலமாக அந்த அரசுக்கு எதிராகப் போராடி வரும் துருக்கி குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் கிளையாக சிரியா குர்திஸ் போராளிகள் இருப்பதால் இந்த போராளிகள் துருக்கியின் எல்லையில் நிலைகொள்வதையோ சிரியாவின் யுத்த களத்தில் நின்று போராடுவதையோ துருக்கி விரும்பவில்லை. இதனால் அவர்கள்மீது துருக்கி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பதற்கான பூரண ஒத்துழைப்பை நாம் அமெரிக்காவுக்கு வழங்கி வருவதால் எமது நீண்ட கால எதிரிகாளான குர்திஸ் குழுவை வைத்து ஐ.எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்கா அவர்களுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி வேண்டிக் கொண்டபோதும் அமெரிக்கா அதற்கு இணங்கவில்லை.
ஐ.எஸிற்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த சிரியா குர்திஷ் ஆயுதக் குழுவை கலைப்பதற்கு அமெரிக்கா தயாரில்லை. இந்தக் குழு இதுவரை ஐ.எஸ்இற்கு எதிராகப் போராடி பல வெற்றிகளைக் குவித்துள்ளது. பல இடங்களை ஐ.எஸ்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது. ஈராக்கில் பேஸ்மகா என்ற குர்திஷ் ஆயுதக் குழு ஐ.எஸிற்கு எதிரான வெற்றிகளைக் குவித்து வருவதுபோல் சிரியாவில் இந்த சிரியா குர்திஸ் ஆயுதக் குழுவும் வெற்றியைக் குவித்து வருகின்றது.
ஆனால், இந்த ஆயுதக் குழு கலைக்கப்பட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் துருக்கி உள்ளது. அமெரிக்கா அந்த விடயத்தில் விடாப்பிடியாக இருப்பதால் துருக்கி இப்போது அந்த ஆயுதக் குழு மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில்தான் துருக்கிற்குள் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளும் சிரியா குர்திஸ் ஆயுதக் குழுவுமே காரணம் என்று தெரிவித்து அவர்களை நசுக்குவதற்காக துருக்கிய இராணுவம் கடந்த கிழமை யுத்த தாங்கிகள் சகிதம் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
இந்த ஆயுதக் குழுக்களை முற்றாக நசுக்கி விட வேண்டும் என்றும் துருக்கியை அண்டிய சிரியா பகுதி பாதுகாப்பான பகுதியாக இருக்க வேண்டும் என்றும் துருக்கி விரும்புகின்றது. அதற்கான படை நடவடிக்கையைத்தான் துருக்கி இப்போது தீவிரப்படுத்தியுள்ளது.
துருக்கியின் இந்த படை நகர்வின் உண்மையான நோக்கம் இதுவல்ல. இதன் தூர நோக்கான காரணம் யாதெனில் குர்திஸ் போராளிகள் அங்கு சுயாட்சி நிறுவுவதைத் தடுப்பதுதான். இந்த குர்திஸ்களின் ஆயுதப் போராட்டம் சில வெற்றிகளை அடைந்ததால் அவர்கள் சுயாட்சியை நிறுவப் போவதாக அண்மையில் அறிவித்தனர்.
அது நிகழ்ந்தால் அது துருக்கியைத்தான் அதிகம் பாதிக்கும். சுயாட்சியைக் கோரி துருக்கிற்குள் நீண்ட காலமாகப் போராடி வரும் குர்திஸ் தொழிலாளர் கட்சியின் கிளை அமைப்புதான் இந்த சிரியா குர்திஸ் போராளிகள் இயக்கம்.
ஆகவே, இவர்களின் சுயாட்சி நோக்கம் நிறைவேறினால் அது துருக்கிய குர்திஸ்களுக்கு சாதகாமகப் போய்விடும். இதனால், இந்த அமைப்பை இப்போதே நசுக்க வேண்டிய தேவை துருக்கிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் துருக்கி சிரியாவுக்குள் நுழைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு துருக்கி சிரியாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு மேலும் யுத்த அளவு அதிகரித்துள்ளது. பல்முனை யுத்தமாக அது மாறியுள்ளது.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை தனக்கு துருக்கியும் தேவை குர்திஸ் போராளிகளும் தேவை என்ற நிலைப்பாட்டில்தான் அமெரிக்கா உள்ளது. இதனால் துருக்கியின் படை நகர்வு ஐ.எஸிற்கு எதிரானதாக இருக்கட்டும். நீங்கள் இதிலிருந்து நீங்கள் சற்றுத் தள்ளி நில்லுங்கள் என்று அமெரிக்கா குர்திஸ் குழுவுக்கு கூறியுள்ளது. இருந்தாலும்,குர்தி ஸ் போராளிகளைத் தேடித் தேடி அழிக்கும் திட்டத்துடன் துருக்கி சிரியாவுக்குள் நுழைந்துள்ளது.
துருக்கியில் இடம்பெறும் தற்கொலைத் தாக்குதல்களையும் குர்திஸ்களின் சுயாட்சியையும் தடுப்பதுதான் இந்த நகர்வின் நோக்கமாக இருந்தாலும் துருக்கி இராணுவம் அரசுக்கு எந்தளவு கட்டுப்படுகின்றனர்; எந்தளவு விசுவாசமாக இருக்கின்றனர் என்பதை துருக்கியின் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்ட பின்னர் அறிந்துகொள்ள வேண்டிய தேவை ஜனாதிபதி ஆதுர்கானுக்கு இருப்பதால் அந்த விசுவாசத்தை அறிவதும் இந்தப் படை நகர்வின் நோக்கமாக இருக்கின்றது.
[ எம்.ஐ.முபாறக் ]