Wednesday, September 7, 2016

முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்.

(கல்முனையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரசின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிசாத் ஆற்றிய உரையின் தொகுப்பு) 

சுஐப் எம்.காசிம்    

முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டதாலும், ஆயுதக் கலாசாரத்தின் அட்டூழியங்களைத் தாங்க முடியாததாலுமே, சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் தனிக்கட்சி அமைத்தார். எமக்கென்று ஒரு கட்சி வேண்டும், எமக்கென ஒரு குரல் வேண்டும், எமக்கென்று ஓர் இயக்கம் தேவை என்ற நோக்கிலே மர்ஹூம் அஷ்ரப் இந்தக் கட்சியை ஆரம்பித்து, தைரியமாக முஸ்லிம் சமூகத்தின்  அரசியல் பயணத்தை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்தார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரியை அவர் பெற்றுத்தந்தார். பேரம் பேசும் சக்தியை ஏற்படுத்தினார். தலைநிமிர்ந்து வாழ வழி வகுத்தார். சந்திரிக்கா அம்மையார், அமரர் பிரேமதாச ஆகிய இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்குவதில் தீர்மானிக்கும் சக்தியாக நமது சமூகத்தை ஆக்கினார்.

அன்னாரின் மறைவின் பின்னர் கட்சியைப் பொறுப்பெடுத்த தலைமைத்துவம் கடந்த 16 வருடங்களாக மேற்கொண்ட சாதனைகள்தான் என்ன? முஸ்லிம் சமுதாயத்தின் பங்களிப்பு இல்லாமலேயே  ஜனாதிபதியை உருவாக்கும் நிலை உருவாகியது. அரசாங்கத்தை அமைக்கும் பேரம்பேசும் சக்தி இல்லாமல் ஆக்கப்பட்டது. அது மட்டுமின்றி 2002 ஆம் ஆண்டு பிரதமர் ரணிலுக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில்  கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில், முஸ்லிம்கள் ஒரு சிறுகுழுவாக சுட்டிக்காட்டப்பட்ட போது, மு.கா தலைமைத்துவம் அதனைத் தட்டிக்கேட்கும் திராணி இல்லாமல் மௌனம்காத்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அதாவுல்லாஹ், மர்ஹூம் அன்வர் இஸ்மாயில், நான் உட்பட இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களை புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத்துக்கு எதிர்ப்புக்காட்டும்  வகையில் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தோம். எனினும், மு.கா தலைமைத்துவம் அதற்கு மாற்றமான, பிழையான ஒரு முடிவை மேற்கொண்டமை உங்கள் அநேகருக்குத் தெரியும்.

மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னர் இடம்பெற்ற மூன்று ஜனாதிபதித்  தேர்தல்களிலும், முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளரின் பக்கம் சார்ந்து நின்றதோ அந்த வேட்பாளர் தோல்வியைத் தழுவியதே கடந்தகால கசப்பான வரலாறு. அதுமட்டுமின்றி பாராளுமன்றத் தேர்தல்களிலும், சமூகத்தின் பேரம்பேசும் சக்தியை முஸ்லிம் காங்கிரஸ் சாகடித்தமை சரித்திரம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான தீர்மானம் எடுக்க முடியாது மு.கா தடுமாறியது. தபால்மூல வாக்களிப்புக்கு முதல்நாள் “மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று அறிவிப்புச்செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம், மஹிந்தவை விட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெளியேறி, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தபோது. தபால்மூல வாக்கெடுப்பு முடிந்த பின்னர் எங்களுக்குப் பின்னால் மு.கா ஓடி வந்ததும் உங்களுக்குத் தெரியும்.

மனச்சாட்சிப்படி வாக்களிப்பதற்கு ஒருகட்சி நமக்குத் தேவை இல்லை. மர்ஹூம் அஷ்ரப் தனிக்கட்சி அமைத்தது இவ்வாறான செயற்பாடுகளுக்கா? மர்ஹூம் அலி உதுமான் தொடக்கம், மர்ஹூம் அஷ்ரப் வரை நாங்கள் எத்தனை பேரை பலி கொடுத்திருக்கின்றோம்.  

காத்தான்குடி தொடக்கம் ஏறாவூர் வரை நமது சகோதரர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனரே! அவர்களின் கபுறுகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோமே. வடமாகாணத்தில் இருந்து சொப்பிங்பேக் உடன் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டோமே. இவ்வாறான அநியாயங்களை தட்டிக்கேட்டும், சுட்டிக்காட்டியும் பரிகாரம் தேடுவதற்கே, நமக்கென்று ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எங்களுக்கென்று ஒர் இயக்கம் இருக்கின்றது. அது சமுதாயத்துக்காக உரிமைக்குரல் எழுப்பும் என்று நாம் கண்ட கனவுகள் இப்போது தவிடுபொடியாகி விட்டதே. பெருந்தலைவர் எமக்குப் பெற்றுத்தந்த அந்தஸ்து, கௌரவம் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிய கைங்கரியத்தை மட்டுமே மு.கா தலைமை செய்துள்ளது.

அக்கட்சி இப்போது உரிமைக்காகப் போராடுவதும் இல்லை. அபிவிருத்தியையும் மேற்கொள்வதும் இல்லை. மு.கா வின் பிரதான வாக்கு வங்கியாக இருக்கும் அம்பாறை மாவட்டப் பிரதேசத்தின் நிலைமைகளைப் பார்த்தால் அக்கட்சியின் இலட்சணம் விளங்கும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தது மிகச்சொற்ப காலமே. கடந்த தேர்தலில் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட போது சுமார் 33000 வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தன. எனினும், எமக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சிக்கென மாகாணசபை உறுப்பினர்கூட இல்லை. எனினும், எம்மை நம்பி வாக்களித்த மக்களை கைவிடக்கூடாது என்பதற்காக நாம் வாக்குறுதி அளித்தபடி முடியுமான அபிவிருத்தியையும், உதவிகளையும் மேற்கொள்கின்றோம்.

எனினும், மு.கா அதற்குப் பாரிய தடைக்கல் போட்டு வருகின்றது. 16 வருடங்களாக தூக்கத்தில் இருந்தவர்கள், நாம் இந்தப் பிரதேசத்துக்கு வருகின்றோம் என்று செய்தி கிடைத்துவிட்டால், அதற்கு முன்னரே முண்டியடித்துக்கொண்டு வந்து நிற்கிறார்கள். தூங்கியவர்களை விழிக்கச் செய்வதிலும் நாம் வெற்றிபெற்றுள்ளோம்.

இந்த சமுதாயத்தின் வாக்குகளை வசீகரித்து, வெற்றிபெற்று பின்னர் தலைகளை எண்ணிக்காட்டி பேரம்பேசும் ஒரு சின்னத்தனமான, கேவலமான அரசியல் வியாபாரம் நடைபெற்று வருகின்றது. சில நாடுகளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளார்கள். பெருந்தலைவர் மரணித்ததன் பின்னர் முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

இந்தச் சமூகம் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் பயணித்ததை உணர்ந்ததால்தான் நாம் புதிய கட்சி ஆரம்பித்தோம். நான்கு, ஐந்து பேர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்று ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல மாகாணசபை, பிரதேசசபை உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. அரசியலமைப்புச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் நமக்குத் தந்துள்ளான்.

இன்று நாட்டிலே ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெற்று வருவதை நாம் காண்கின்றோம். அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல் முறை மற்றம் என்பவை மி வேகமாக இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம் சமூகம் இவ்வாறான மாற்றங்கள் வேண்டுமென ஒருபோதும் கேட்காதபோதும், அவ்வாறன மாற்றங்கள் விரும்பியோ, விரும்பாமலோ   நிகழும் சந்தர்ப்பத்தில் எமக்கு அநியாயம் இழைக்கப்படலாம். இந்த விஷயங்களில் நிறைய அச்சஉணர்வுகள் இருக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இந்த விடயங்களில் எமக்கு அநீதி இழைக்கப்படக் கூடாதென மிகத்தெளிவாக கூறியுள்ளோம். இவற்றை  மிகவும் பக்குவமாக மக்கள் காங்கிரஸ் கையாண்டு வருகின்றது. நல்லாட்சியைக் கொண்டு வருவதில் ஒட்டு மொத்தமாக நமது சமூகம் உழைத்திருக்கிறது. இந்த வேளையில் நமது அரசியல் தலைமைகள் புத்திஜீவிகள், சிவில்சமூகம் கண்ணும் கருத்துமாக இருப்பது காலத்தின் தேவையாகும்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்கு மாற்றமாக அநீதி இழைக்கப்படுமானால், நாங்கள் உடுத்திருக்கும் ஆடைகள் போல, நாங்கள் பார்க்கின்ற அமைச்சர் பதவியைத் தூக்கி எறியவும் தயங்கமாட்டோம். மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் இந்த விடயத்தில் ஜனநாயக ரீதியாக போராடுவார்கள் என்பதை உங்களுக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இன்று வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுகின்றது. வடக்கும், கிழக்கும் எவரிடமும் கேட்காமலே இரவோடிரவாக இணைக்கப்பட்டது. ஒரு வருடத்தில் கிழக்கு மக்களின் கருத்தை அறிவதாகக் கூறினர். எனினும் அது நடக்கவில்லை. சில கட்சிகள் நீதிமன்றம் சென்றதனால் அது பிரிக்கப்பட்டது. இப்போது வடக்கிலே முதலமைச்சராகத் தமிழர் ஒருவர் இருக்கின்றார். கிழக்கிலே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார். மூவினத்தையும் சேர்ந்தவர்கள் கிழக்கு அமைச்சரவையில் பணி புரிகின்றனர். இவ்வாறான நிலையில் வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் எம்.பிக்கள் கூட விரும்பவில்லை. இவர்கள் என்னிடமும் தங்களது நிலைப்பாடு பற்றி கூறி இருக்கின்றனர்.

வடக்கு,கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில் பேசுங்கள். அதற்கு நாங்கள் ஆதரவு தருவோம். மக்கள் காங்கிரசைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.

மு.கா தலைமை இது தொடர்பில் பேச முடியாது தயக்கம் காட்டுவதன் மர்மம்தான் என்ன? சில சக்திகள் பின்னணியில் இருந்து அவர்களை இயக்குகின்றனரா? அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசித் திரிகின்றனரே. இடத்துக்கிடம் மாறுபாடான கதைகளை கூறுகின்றனரே. மர்ஹூம் அஷ்ரபின் படத்தைப் போட்டு, பாட்டைப் போட்டு அவரது தியாகத்தைச் சொல்லி “மரத்தைக் காப்பற்றுங்கள், மரத்தைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சிக்கூத்தாடி தமது இருப்பைக் காப்பாற்றிவரும் இவர்களின் பின்னால் செல்வதற்கு உங்களின் மனம் இன்னும் இடங்கொடுக்கின்றதா?

இவர்கள் போட்டுள்ள மயக்க ஊசியின், மயக்கத்திலிருந்து இந்த சமுதாயத்தை விடுவித்து, அதனை சீரானபாதையில் கொண்டுசெல்லும் பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்காக நீங்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுமாறு அன்பாய் வேண்டி நிற்கின்றோம். 
                                 


                     
Disqus Comments